மணிப்பூர் வன்முறை: எம்.எல்.ஏ. மீது தாக்குதல்; பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் மக்கள்


மணிப்பூர் வன்முறை:  எம்.எல்.ஏ. மீது தாக்குதல்; பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் மக்கள்
x

மணிப்பூரில் ஏற்பட்ட வன்முறையை தொடர்ந்து, பொதுமக்கள் பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

இம்பால்,

நாட்டின் வடகிழக்கு மாநிலங்களில் ஒன்றான மணிப்பூரில் பெருமளவில் பழங்குடியினர் வசித்து வருகின்றனர். மணிப்பூரில் மெய்தி சமூகத்தினர் மெஜாரிட்டியாக உள்ளனர். அவர்கள் தங்களை பழங்குடியினத்தில் சேர்க்க வேண்டும் என அரசிடம் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

ஒரு சிலர் இதற்கு ஆதரவு தெரிவித்து வருகின்றனர். எனினும், இதற்கு மற்றொரு பழங்குடியினர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில், பழங்குடி மாணவர் சங்கம் சார்பிலான ஒற்றுமை பேரணி என்ற பெயரில் ஊர்வலம் நடத்த முடிவானது.

இதன்படி, பழங்குடி மாணவர் சங்கத்தினர் கடந்த இரு தினங்களுக்கு முன் ஊர்வலம் சென்றனர். பேரணிக்கு போட்டியாக பழங்குடி இனத்தினர் அல்லாதோர் பேரணியும் சவுரசந்திரப்பூர் மாவட்டத்தில் நடந்தது.

அப்போது, திடீரென இரு தரப்பினருக்கு இடையே வன்முறை பரவியது. வீடுகள், குடியிருப்புகள், கடைகளுக்கு தீ வைக்கப்பட்டு கலவரம் வெடித்தது. சாலையில் வழிநெடுகிலும் இருந்த வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.

நிலைமையை கட்டுக்குள் கொண்டு வர போலீசார் குவிக்கப்பட்டனர். அவர்கள் தடியடி நடத்தி கும்பலை கலைத்தனர். இந்த வன்முறை பல மாவட்டங்களுக்கு பரவியதும், அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. இணையதள சேவையை முடக்கியும், ஊரடங்கை அமல்படுத்தியும் உள்ளது.

பொதுமக்கள் அமைதி காக்குமாறு முதல்-மந்திரி பிரேன் சிங் கேட்டு கொண்டார். சட்டம் மற்றும் ஒழுங்கை மீட்டெடுக்கவும், கூடுதல் பாதுகாப்பிற்காகவும் இந்திய ராணுவம் மற்றும் அசாம் ரைபிள் படை பிரிவுகளும் வரவழைக்கப்பட்டு உள்ளனர்.

அனைத்து சமூகங்களை சேர்ந்த மக்கள் என 7,500 பேர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர். இதுபற்றி மத்திய மந்திரி அமித்ஷா, மணிப்பூர் முதல்-மந்திரி பைரன் சிங்கை தொலைபேசி வழியே தொடர்பு கொண்டு பேசினார். மணிப்பூர் நிலைமை மற்றும் சட்டம் மற்றும் ஒழுங்கு ஆகியவை பற்றி கேட்டறிந்து உள்ளார்.

நிலைமை அத்துமீறி சென்ற நிலையில், வன்முறை பரவாமல் தடுக்கும் நோக்கில், 5 நாட்களுக்கு மணிப்பூரில் இணைய தள சேவை துண்டிக்கப்பட்டு உள்ளது. மேலும், வன்முறையை கட்டுப்படுத்த 8 மாவட்டங்களில் ஊரடங்கு உத்தரவையும் அரசு அமல்படுத்தியது. கலவரக்காரர்களை கண்டதும் சுடவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதிரடி விரைவு படையினரும், ராணுவம் மற்றும் துணை ராணுவம் படையினரும் கூடுதல் பாதுகாப்பிற்காக மணிப்பூரின் பல பகுதிகளிலும் குவிக்கப்பட்டு உள்ளனர். ஆயுதமேந்திய வீரர்களின் உதவியுடன், பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.

மணிப்பூரில் ஏற்கனவே 15 கம்பெனி மத்திய ஆயுத படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், கூடுதலாக 5 கம்பெனி அதிரடி படையினரை மணிப்பூருக்கு மத்திய அரசு அனுப்பி வைத்துள்ளது.

கர்நாடக மாநில தேர்தல் பிரசார பணிகளை ரத்து செய்த அமித்ஷா டெல்லியில் முகாமிட்டு மணிப்பூர் விவகாரம் தொடர்பாக ஆலோசனை நடத்தி வருகிறார். மணிப்பூரில் இயல்பு நிலையை திரும்புவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பாக வடகிழக்கு மாநில முதல் மந்திரிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்தினார்.

இந்த வன்முறையால், ஊரடங்கு அமலான நிலையில், மக்கள் அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. வேலைக்கு செல்பவர்கள் உள்பட பொதுமக்களில் பலரும், வாகனங்களை தள்ளி கொண்டு, பெட்ரோல் பங்கில் நீண்ட வரிசையில் காத்து கிடக்கின்றனர்.

வன்முறை பரவலால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. வன்முறையில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.வை கும்பல் அடித்து தாக்கியது. அவரது நிலைமை கவலைக்குரிய வகையில் உள்ளது என முதலில் தெரிவிக்கப்பட்டது. தீவிர சிகிச்சைக்கு பின்னர் உடல்நலம் தேறி வருகிறார்.


Next Story