சந்திரயான்-3 விண்கலத்திற்கு கர்நாடகத்தில் உதிரி பாகங்கள் தயாரிப்பு


சந்திரயான்-3 விண்கலத்திற்கு கர்நாடகத்தில் உதிரி பாகங்கள் தயாரிப்பு
x

சந்திரயான்-3 விண்கலத்திற்கு கர்நாடகத்தில் இருந்து உதிரிபாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளதாக தனியார் நிறுவன நிர்வாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:-

நிலவை ஆராய...

இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையமான இஸ்ரோ சந்திரயான் - 3 விண்கலத்தை நேற்று வெற்றிகரமாக விண்ணில் ஏவியது. நிலவை ஆராய்வதற்காக இந்த விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. எல்.வி.எம்.3 எம்-4 ராக்கெட் மூலம் விண்கலம் ஏவப்பட்டது. இந்த நிலையில் சந்திரயான் விண்கலத்திற்கான உதிரிபாகங்கள் கர்நாடக மாநிலம் பெலகாவில் தயாரிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

பெலகாவி மாவட்டத்தில் உள்ள சர்வோ கன்ட்ரோல் ஏரோஸ்பேஸ் இந்தியா என்ற தனியார் நிறுவனம் சார்பில் விண்கல உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் தீபக் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறியதாவது:-

பெருமை

கடந்த 2019-ம் ஆண்டு நிலவை ஆராய சந்திரயான்-2 விண்கலம் ஏவப்பட்டது. கடைசி நிமிடங்களில் விண்கலம் நிலவில் மோதியது. இதனால் அந்த முயற்சி தோல்வி அடைந்தது. இந்த சம்பவத்தின்போது நான் வெளிநாட்டில் இருந்தேன். அப்போது இஸ்ரோ முந்தைய தலைவர் சிவன், என்னை தொடர்பு கொண்டு பேசினார். இதையடுத்து நான் மீண்டும் பெலகாவிக்கு வந்தேன். அதனை தொடர்ந்து சந்திரயான்-3 விண்கலத்திற்கான உதிரிபாகங்களை தயாரிக்கும் பணியில் ஈடுபட்டோம்.

வரும் நாட்களில் அதிக தொழில்நுட்பங்கள் பயன்படுத்தப்படும். விண்கலத்தை பொருத்தமட்டில் அதன் எடை முக்கியமானது. எனவே விண்கலத்தின் எடையை குறைப்பது பெரும் சவால் ஆனது. மங்கள்யான் திட்டத்திற்கும், எங்கள் நிறுவனம் சார்பில் உதிரி பாகங்கள் தயாரிக்கப்பட்டது. இஸ்ரோவுடன் இணைந்து செயல்பட வாய்ப்பு கிடைத்தது மகிழ்ச்சி. இது கர்நாடகத்திற்கு பெருமையாகும். சந்திரயான்-3 சாதனை படைக்க எனது வாழ்த்துக்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story