பா.ஜ.க.வின் சக்தியை பற்றி அறியாமல் பலர் உள்ளனர்: பிரசாரத்தில் பிரதமர் மோடி பேச்சு
என்னை திட்டிவிட்டால் பணி முடிந்து விட்டது என காங்கிரசார் நினைக்கிறார்கள் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரசாரத்தில் பேசியுள்ளார்.
தியோகார்,
ராஜஸ்தானில் சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு வருகிற 25-ந்தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு, ஆளும் காங்கிரஸ், பா.ஜ.க. உள்ளிட்ட கட்சிகள் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.
இதில், தியோகார் நகரில் நடந்த பொது கூட்டமொன்றில் கலந்து கொண்டு பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பேசும்போது, பா.ஜ.க. கொடியை நம்முடைய மகள்கள், சகோதரிகள் மற்றும் தாய்மார்கள் சுமந்து செல்லும் விதம் உண்மையில் பாராட்டுதலுக்குரியது. இதனை, மாநிலம் முழுவதும் நான் காண்கிறேன் என்று கூறினார்.
ராஜஸ்தானில் உள்ள மக்கள் காங்கிரசை சகித்து கொள்ள தயாராக இல்லை. ஆட்சியில் உள்ள காங்கிரஸ் அரசில் பெண்களுக்கு எதிராக அதிக அளவில் நடந்து வரும் அராஜகங்களை போன்று வேறெந்த அரசையும் ராஜஸ்தான் பார்த்ததில்லை என்று கூறினார்.
தொடர்ந்து அவர் பேசும்போது, பா.ஜ.க.வின் சக்தியை பற்றி அறியாமல் பலர் உள்ளனர். மோடியை திட்டிவிட்டால், அவர்களுடைய பணி முடிந்து விட்டது என அவர்கள் நினைக்கிறார்கள்.
ஆனால், நம்முடைய தொண்டர்களின் ரத்தம் மற்றும் வியர்வையால் பா.ஜ.க. உருவாகியுள்ளது என்பது அவர்களுக்கு தெரியாது என்று கூறினார்.