கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது


கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தல் வேட்புமனு தாக்கல் தொடங்கியது
x
தினத்தந்தி 13 Jun 2023 6:45 PM GMT (Updated: 13 Jun 2023 6:47 PM GMT)

கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

பெங்களூரு:

கர்நாடக மேல்-சபை இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது. இதில் காங்கிரஸ் வேட்பாளர்களே வெற்றி பெற வாய்ப்பு உள்ளது.

வேட்புமனு தாக்கல்

கர்நாடகத்தில் சட்டசபை, மேல்சபை என 2 அவைகள் உள்ளன. இதில் 75 உறுப்பினர்களை கொண்ட கர்நாடக மேல்-சபையில் உறுப்பினர்களாக இருந்த பாபுராவ் சின்சனசூர், லட்சுமண் சவதி மற்றும் ஆர்.சங்கர் ஆகியோர் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர். பாபுராவ் சின்சனசூரின் பதவி காலம் வருகிற 2024-ம் ஆண்டு ஜூன் 17-ந் தேதி வரையும், ஆர்.சங்கரின் பதவி காலம் வருகிற 2026-ம் ஆண்டு ஜூன் 30-ந் தேதி வரையும், லட்சுமண் சவதியின் பதவி காலம் வருகிற 2028-ம் ஆண்டு ஜூன் மாதம் 14-ந் தேதி வரையும் உள்ளது.

அவர்களின் ராஜினாமாவால் மேல்-சபையில் 3 இடங்கள் காலியாகின. இதையடுத்து அந்த 3 இடங்களுக்கும் வருகிற 30-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் என்று ஏற்கனவே அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் இதற்கான வேட்புனு தாக்கல் நேற்று தொடங்கியது. தேர்தல் அதிகாரியாக சட்டசபை செயலாளர் விசாலாட்சி நியமிக்கப்பட்டுள்ளார்.

தேர்தல் மன்னன் பத்மராஜன்

மனுத்தாக்கல் தினமும் காலை 11 மணிக்கு தொடங்கி மதியம் 3 மணி வரை நடைபெறும். மனு தாக்கல் செய்பவர்கள் டெபாசிட் தொகையாக ரூ.10 ஆயிரம் செலுத்த வேண்டும். மனுக்களை தாக்கல் செய்ய 20-ந் தேதி கடைசி நாள் ஆகும். 21-ந் தேதி மனுக்கள் பரிசீலனை நடக்கிறது. 23-ந் தேதி மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள் ஆகும். போட்டி இருந்தால் 30-ந் தேதி ஓட்டுப்பதிவு நடைபெறும். அன்றைய தினமே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.

இந்த தேர்தலில் எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப்போட உள்ளனர். மூன்று இடங்களும் ஆளும் காங்கிரசுக்கே கிடைக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் முதல் நாளாக தமிழ்நாட்டின் மேட்டூரை சேர்ந்த தேர்தல் மன்னன் பத்மராஜன், நேற்று பெங்களூரு விதான சவுதாவில் தேர்தல் அதிகாரி விசாலாட்சியிடம் வேட்புமனு தாக்கல் செய்தார். இதன் மூலம் அவர் 235-வது முறையாக தேர்தலில் மனு தாக்கல் செய்துள்ளார். நாட்டின் எந்த மூலையில் தேர்தல் நடைபெற்றாலும், அங்கு சென்று மனு தாக்கல் செய்வதை அவர் வழக்கமாக கொண்டுள்ளார். அதே போல் கர்நாடக மேல்-சபை தேர்தலில் அவர் மனு தாக்கல் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் வெற்றி பெற்றால்...

கர்நாடக மேல்-சபையில் மொத்த உறுப்பினா்களின் எண்ணிக்கை 75. இதில் தற்போது பா.ஜனதாவுக்கு 34 உறுப்பினர்களும், காங்கிரசுக்கு 24 பேரும், ஜனதா தளம் (எஸ்) கட்சிக்கு 8 பேரும், சுயேச்சை ஒருவரும் உள்ளனர். 7 இடங்கள் காலியாக உள்ளன.

அவற்றில் தற்போது 3 இடங்களுக்கு இடைத்தேர்தல் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த தோ்தலில் 3 இடங்களிலும் காங்கிரஸ் வெற்றி பெற்றால் மேல்-சபையில் அக்கட்சியின் பலம் 27 ஆக அதிகரிக்கும்.

ஆனாலும் பா.ஜனதாவுக்கு அதிக உறுப்பினர்கள் உள்ளனர். பெரும்பான்மைக்கு 38 உறுப்பினர்களின் ஆதரவு தேவை. ஜனதா தளம்(எஸ்) கட்சி ஆதரவு வழங்கினால் பா.ஜனதாவை சேர்ந்த பசவராஜ் ஹொரட்டி மேல்-சபை தலைவராக நீடிப்பார். ஆனால் அக்கட்சி யாருக்கு ஆதரவு வழங்குகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்க வேண்டும்.


Next Story