இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் மந்திரி டி.சுதாகர் திடீர் ஆய்வு


இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் மந்திரி டி.சுதாகர் திடீர் ஆய்வு
x
தினத்தந்தி 24 Aug 2023 6:45 PM GMT (Updated: 24 Aug 2023 6:45 PM GMT)

இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மந்திரி டி.சுதாகர் பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்களை அழைத்து எச்சரித்தார்.

சித்ரதுர்கா-

இரியூர் அரசு ஆஸ்பத்திரியில் திடீர் ஆய்வு மேற்கொண்ட மந்திரி டி.சுதாகர் பணியில் அலட்சியமாக செயல்பட்ட டாக்டர்களை அழைத்து எச்சரித்தார்.

ஆஸ்பத்திரியில் மந்திரி ஆய்வு

சித்ரதுர்கா மாவட்டம் இரியூரில் உள்ள அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்தது. குறிப்பாக பிரசவ வார்டுகளில் இருக்கும் பெண்களுக்கு சரியாக சிகிச்சை அளிக்கப்படவில்லை என்று கூறப்பட்டது. இந்தநிலையில் நேற்று மாவட்ட பொறுப்பு மந்திரி டி.சுதாகர் திடீரென்று இரியூர் அரசு ஆஸ்பத்திரிக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார்.

இதை ஆஸ்பத்திரியில் பணியாற்றும் டாக்டர்கள் எதிர்பார்க்கவில்லை. நேராக பிரசவ வார்டிற்கு சென்ற மந்திரி, அங்கிருந்த பெண்களை சந்தித்து குறைகளை கேட்டறிந்தார். அப்போது அவர்கள் இரவு நேரத்தில் டாக்டர்கள் சரியாக வருவது இல்லை. இதனால் அறுவை சிகிச்சை செய்ய தாமதம் ஏற்பட்டதாக கூறினர். இதை கேட்ட மந்திரி சுதாகர் உடனே டாக்டர்களை அழைத்தார்.

அப்போது ஒரு டாக்டர் மட்டும் அங்கு வந்து நின்றார். அவரை பார்த்த மந்திரி, மற்ற டாக்டர்கள் எங்கே என்று கேட்டார். அதற்கு அந்த டாக்டர், மற்றவர்கள் கையெழுத்து போட்டுவிட்டு, வீட்டிற்கு சென்றுவிடுவார்கள் என்று கூறினார்.

டாக்டர்களுக்கு எச்சரிக்கை

உடனே மாவட்ட பஞ்சாயத்து முதன் செயல் அதிகாரியை அழைத்த மந்திரி, உடனே அனைத்து டாக்டர்கள், நர்சுகளை பணிக்கு வரச்செய்யும்படி உத்தரவிட்டார்.இதையடுத்து அனைத்து டாக்டர்கள், நர்சுகளுக்கு இதுகுறித்து தகவல் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அடித்துபிடித்து வந்த டாக்டர்கள், மந்திரியை சந்தித்து மன்னிப்பு கேட்டனர். அவர்களை எச்சரித்த மந்திரி, இனி இரவு நேரத்தில் டாக்டர்கள் சரியாக பணியாற்றவில்லை என்றால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கண்டித்தார்.

பின்னர் நோயாளிகளுக்கு சரியாக சிகிச்சை அளிக்கும்படி கூறிய அவர், பணியில் யாரும் அலட்சியமாக செயல்பட கூடாது என்று எச்சரித்தார். இதை கேட்ட டாக்டர்கள் அலட்சியமாக செயல்படமாட்டோம் என்று உறுதி அளித்த பின்னர் மந்திரி அங்கிருந்து சென்றார்.


Next Story