போரில் மாயம்; பாகிஸ்தான் பாதுகாப்பு அதிகாரிகள் 38 பேரின் பட்டியல் இந்தியாவிடம் ஒப்படைப்பு
இந்தியாவில் தண்டனை காலம் நிறைவடைந்த அனைத்து பாகிஸ்தானிய சிறை கைதிகளையும் உடனடியாக விடுவிக்கும்படி, இந்திய அரசிடம் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கேட்டு கொண்டுள்ளது.
புதுடெல்லி,
1965 மற்றும் 1971 ஆகிய ஆண்டுகளில் நடந்த போர்களில் காணாமல் போன தங்களுடைய நாட்டு பாதுகாப்பு அதிகாரிகளின் பட்டியலை இந்தியாவிடம் பாகிஸ்தான் நேற்று வழங்கியது. இதன்படி, இந்தியாவின் கட்டுப்பாட்டில் இருக்க கூடும் என நம்பப்படுகிற 38 பாகிஸ்தானிய பாதுகாப்பு அதிகாரிகளின் பட்டியல், இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டது.
இதேபோன்று, இந்திய சிறைச்சாலைகளில் உள்ள 452 பாகிஸ்தானிய மக்கள் மற்றும் மீனவர்கள் பட்டியலும் இந்தியாவிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது. இதற்கு பதிலாக, பாகிஸ்தான் சிறைச்சாலைகளில் உள்ள 254 இந்திய குடிமக்கள் மற்றும் மீனவர்கள் பட்டியல் பாகிஸ்தானிடம் ஒப்படைக்கப்பட்டு உள்ளது.
இந்தியாவில் தண்டனை காலம் நிறைவடைந்த அனைத்து பாகிஸ்தானிய சிறை கைதிகளையும் உடனடியாக விடுவிக்கும்படி, இந்திய அரசிடம் பாகிஸ்தான் வெளியுறவு அலுவலகம் கேட்டு கொண்டுள்ளது.
2008-ம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட தூதரக அளவிலான இருதரப்பு ஒப்பந்தத்தின்படி ஜனவரி 1 மற்றும் ஜூலை 1 ஆகிய நாட்களில் இரு நாடுகளுக்கு இடையே இந்த பட்டியல்கள் பரிமாறி கொள்ளப்படுகின்றன.