காஷ்மீரில் காணாமல் போன ராணுவ வீரர் கண்டுபிடிப்பு.!
காணாமல் போன ராணுவ வீரர் ஜாவித், தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
ஸ்ரீநகர்,
ஜம்மு-காஷ்மீர் யூனியன் பிரதேசம் குல்காம் மாவட்டம் அஜதல் பகுதியை சேர்ந்தவர் ஜாவித் அகமது வானி (வயது 25). ராணுவ வீரரான இவர் லடாக்கின் லே பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார். இதனிடையே, ஜாவித் கடந்த சில நாட்களுக்கு முன் விடுப்பில் சொந்த ஊருக்கு வந்துள்ளார்.
அப்போது, கடந்த வாரம் மளிகை பொருட்கள் வாங்க, காரில் சவல்ஹம் பகுதிக்கு சென்ற ஜாவித், இரவு வெகுநேரமாகியும் ஜாவித் வீடு திரும்பவில்லை. இதனால் சந்தேகமடைந்த குடும்பத்தினர் ஜாவித்தை அருகில் உள்ள கிராமங்களில் ஜாவித்தை தேடினர்.
அப்போது, பரன்ஹல் என்ற கிராமத்தின் அருகே ஜாவித் கார் நிறுத்தப்பட்டிருந்தது. காரின் கதவுகள் திறக்கப்பட்டிருந்தது. காரின் இருக்கையில் ரத்தக்கறை இருந்தது. மேலும், ஜாவித்தின் செருப்புகளும் கார் அருகே கிடந்தன.
இதனால், அதிர்ச்சியடைந்த உறவினர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலறிந்து போலீசார், ராணுவம், பாதுகாப்புப்படையினர் விரைந்து வந்து தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.
இந்த நிலையில், காணாமல் போன ராணுவ வீரர் ஜாவித், தற்போது கண்டுபிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அவர் காணாமல் போனதன் பின்னணியில் உள்ள சூழ்நிலைகளைக் கண்டறிய போலீசார் முயற்சித்து வருகின்றனர். அவருக்கு மருத்துவ பரிசோதனைகள் நடைபெற்ற பிறகு, இது தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.
கடந்த காலங்களில் காஷ்மீரில் விடுமுறையில் வீட்டிற்கு சென்றிருந்த பல ராணுவ வீரர்கள் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டு கொல்லப்பட்டது குறிப்பிடத்தக்கது.