குடும்ப அரசியல் நாட்டுக்கு கேடு - பிரதமர் மோடி

இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார்.
மும்பை,
பிரதமர் மோடி இன்று மராட்டியம் சென்றுள்ளார். அங்கு பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற அவர், மும்பை - நவி மும்பை நகரங்களை இணைக்கும் வகையில் கடலில் 22 கிலோமீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட பாலத்தையும் திறந்து வைத்தார்.
இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக நாசிக்கில் நடைபெற்ற தேசிய இளைஞர் திருவிழா நிகழ்ச்சியை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி, " இளைஞர்கள் தங்கள் பெயரை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ள வேண்டும். இளைஞர்கள் போதை பழக்கத்தில் இருந்து விலகி இருக்க வேண்டும். இந்தியா, ஜனநாயகத்தின் தாய். வாக்களிப்பதன் மூலம் இளைஞர்கள் தங்கள் அரசியல் பார்வையை வெளிப்படுத்தினால் நாட்டின் எதிர்காலம் சிறப்பாக இருக்கும். ஜனநாயக நடைமுறையில் இளைஞர்களின் பங்களிப்பு நாட்டின் சிறந்த எதிர்காலத்தை உறுதி செய்யும். முதல் முறை வாக்காளர்கள் இந்திய ஜனநாயகத்திற்கு புதிய சக்தி, ஆற்றலை கொண்டு வருகின்றனர்.
தேர்தல் நடைமுறையில் இளைஞர்கள் பங்களிப்பு அளிக்கும்போது, குடும்ப அரசியலின் தாக்கத்தை உங்களால் குறைக்க முடியும். குடும்ப அரசியல் நாட்டிற்கு மாபெரும் கேடு விளைவிக்கும் என்பது உங்களுக்கு தெரியும் " என்றார்.