நிலவைத் தொடர்ந்து சூரியன் ஆய்வு பணி: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்


நிலவைத் தொடர்ந்து சூரியன் ஆய்வு பணி: இஸ்ரோ தலைவர் சோம்நாத் தகவல்
x

நிலவைத் தொடர்ந்து அடுத்து சூரியனை ஆய்வு செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறோம் என்று இஸ்ரோ தலைவர் சோம்நாத் கூறினார்

பெங்களூரு,

'சந்திரயான்-3' விண்கலத்தில் இருந்து பிரிந்து சென்ற லேண்டர் வெற்றிகரமாக நிலவின் தென்துருவ மேற்பரப்பில் நேற்று தரையிறங்கியது. அதையடுத்து பெங்களூருவில் உள்ள தரை கட்டுப்பாட்டு மையத்தில் இஸ்ரோ தலைவர் எஸ்.சோம்நாத் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ மிகப்பெரிய ஒரு திட்டத்தை கூட்டு முயற்சியால் வெற்றிபெற வைத்துள்ளது. பல்வேறு சோதனைகளுக்கு இடையில் இந்த சாதனையை இஸ்ரோ விஞ்ஞானிகள் குழுவினர் படைத்துள்ளனர். குறிப்பாக 'சந்திரயான்-3'-ஐ சுமந்து சென்ற ராக்கெட் ஏவுதல், விண்கலத்தில் இருந்து லேண்டர் பிரிந்தது, தரையிறங்கியது உள்ளிட்ட பல்வேறு சவால்கள் முடிக்கப்பட்டுள்ளன.

அடுத்து சூரியன் ஆய்வு

லேண்டரில் இருந்து பிரிந்து சென்ற ரோவர் ஒரு சில மணி நேரங்களில் நிலவில் கால் பதித்து தன்னுடைய 14 நாட்கள் ஆய்வுப்பணியை தொடங்கும்.

நாடு முழுவதும் உள்ள பள்ளிகள், கிராமங்களில், லேண்டர் நிலவில் தரையிறங்கும் காட்சி ஒளிபரப்பு செய்யப்பட்டது. அதேபோல லேண்டர் வெற்றிக்காக பூஜைகள், ஹோமங்கள், சர்வ மத பிரார்த்தனைகள் நடைபெற்றன.

அடுத்து இதேபோன்று சூரியனை ஆய்வு செய்யும் 'ஆதித்யா எல்-1' என்ற விண்கலம் விண்ணில் அனுப்பப்பட உள்ளது. அதைத் தொடர்ந்து மனிதனை விண்ணுக்கு அனுப்பும் ககன்யான் திட்டத்துக்கான சோதனை ராக்கெட் செப்டம்பர் கடைசி அல்லது அக்டோபர் முதல் வாரத்தில் ஏவப்பட உள்ளது என்று அவர் கூறினார்.

வெற்றிகரம்

இதுகுறித்து திருவனந்தபுரத்தில் உள்ள திரவ உந்து அமைப்புகள் மையத்தின் (எல்.பி.எஸ்.சி.) இயக்குனர் நாராயணன் கூறும்போது, 'சந்திரயான்-3' விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டதற்கும், விண்கலத்தை வெற்றிகரமாக நிலவு சுற்றுவட்ட பாதைக்கு அழைத்துச் சென்றது உள்ளிட்ட பல்வேறு பணிகளை செய்து சாதனை படைத்ததற்கும், இஸ்ரோ குழுவினருக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்' என்றார்.

அப்போது விஞ்ஞானி முருகன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.


Next Story