2 குழந்தைகளை கொன்று அணையில் குதித்து தாய் தற்கொலை


2 குழந்தைகளை கொன்று அணையில் குதித்து தாய் தற்கொலை
x
தினத்தந்தி 20 Nov 2022 12:15 AM IST (Updated: 20 Nov 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

பெலகாவி அருகே, குடும்ப தகராறில் 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாயும் அணையில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்து உள்ளது.

பெலகாவி:

குடும்ப தகராறு

பெலகாவி மாவட்டம் ராமதுர்கா தாலுகா சுஞ்சனூர் கிராமத்தை சேர்ந்த கூலி தொழிலாளியின் மனைவி தனுஜா (வயது 34). இவர்களது மகன் சுதீப் (4). மகள் ராதிகா (3). இந்த நிலையில் தனுஜாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக சொல்லப்படுகிறது. இதனால் தனுஜா மனம் உடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் கடந்த

வியாழக்கிழமை இரவும் தனுஜாவுக்கும், அவரது கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது.

இதனால் மனம் உடைந்த தனுஜா குழந்தைகளை அழைத்து கொண்டு வீட்டில் இருந்து வெளியேறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணவர், தனுஜாவையும், குழந்தைகளையும் பல்வேறு இடங்களில் தேடிப்பார்த்தார். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை. இந்த நிலையில் சவதத்தி புறநகர் பகுதியில் உள்ள நவிலுதீர்த்த அணையின் நீர்தேக்க பகுதியில் நேற்று காலை தனுஜா, சுதீப், ராதிகா ஆகியோர் பிணமாக மிதந்தனர்.

குழந்தைகள் கொலை

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த கிராம மக்கள் உடனடியாக சவதத்தி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் அங்கு விரைந்து சென்ற போலீசார், தீயணைப்பு படையினர் உதவியுடன் தனுஜா, சுதீப், ராதிகாவின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சவதத்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் நடத்திய விசாரணையில் கணவருடன் ஏற்பட்ட குடும்ப தகராறு காரணமாக சுதீப், ராதிகாவை அணையில் வீசி கொன்றுவிட்டு அதே அணையில் குதித்து தனுஜாவும் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்து உள்ளது. இந்த சம்பவம் குறித்து சவதத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். 2 குழந்தைகளை கொன்றுவிட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சுஞ்சனூர், சவதத்தி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


Next Story