தாய்-மகனின் கை, காலை கட்டிப்போட்டு நகை கொள்ளை: 6 பேர் கைது


தாய்-மகனின் கை, காலை கட்டிப்போட்டு நகை கொள்ளை: 6 பேர் கைது
x
தினத்தந்தி 30 Sep 2023 6:45 PM GMT (Updated: 30 Sep 2023 6:46 PM GMT)

புத்தூரில் தாய், மகனின் கை, கால்களை கட்டிப்போட்டு ரூ.3½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்து சென்ற 6 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாக போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்வந்த் கூறியுள்ளார்.

மங்களூரு:-

தாய், மகனிடம் கொள்ளை

தட்சிண கன்னடா மாவட்டம் புத்தூர் தாலுகா படுவனூரை சேர்ந்தவர் குருபிரசாத்ராய். கடந்த சில நாட்களுக்கு முன்பு மர்மநபர்கள் சிலர் இவரது வீட்டிற்குள் நுழைந்து குருபிரசாத்ராயின் மனைவி மற்றும் மகனின் கை, கால்களை கட்டிபோட்டு ரூ.3½ லட்சம் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். இதுகுறித்து புத்தூர் புறநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை தேடி வந்தனர். இந்தநிலையில் கொள்ளை வழக்கு தொடர்பாக 6 பேரை போலீசார் கைது செய்தனர்.

6 பேர் கைது

நேற்று இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டியளித்த போலீஸ் சூப்பிரண்டு ரிஷ்வந்த் கூறியதாவது:-

புத்தூரில் தாய், மகனை கட்டிப்போட்டு ரூ.3½ லட்சம் நகை, பணத்தை கொள்ளையடித்த வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்தனர். விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தை சேர்ந்த சுதீர், கிரண், சணல், வசந்த், முகமது பைசல், அப்துல் நிஷார் என்று தெரியவந்தது. இவர்கள் அனைவரும் திருட்டு, கொள்ளை என பல்வேறு வழக்கில் தொடர்புடையவர்கள். கேரளாவில் இருந்து தட்சிண கன்னடாவிற்கு வந்து கொள்ளையில் ஈடுபட்டுள்ளனர். இதற்கிடையில் இந்த 6 பேருக்கும், கேரள மாநிலம் கண்ணூர் சிறையில் ரவி என்ற கொள்ளையனுக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருப்பது தெரியவந்துள்ளது.

போலீஸ் விசாரணை

ரவியின் தூண்டுதலின் பேரில் இந்த கொள்ளையில் 6 பேரும் ஈடுபட்டிருப்பது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் ரவியை மங்களூரு அழைத்து வந்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதற்கிடையில் கைதான 6 பேரிடம் இருந்து தங்க நகைகள் மற்றும் ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைதான 6 பேர் மீதும் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.


Next Story