பூட்டிய வீட்டில் தாய் - மகள்கள் பிணமாக மீட்பு; அதிர்ச்சி சம்பவம்


பூட்டிய வீட்டில் தாய் - மகள்கள் பிணமாக மீட்பு; அதிர்ச்சி சம்பவம்
x

பூட்டிய வீட்டில் தாய், 2 மகள்கள் பிணமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி,

தலைநகர் புதுடெல்லியின் வசந்த் விஹார் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பு உள்ளது. இந்த அடுக்குமாடி குடியிருப்பின் 207வது வீட்டில் மஞ்சு என்ற பெண் தனது இரு மகள்களான அன்ஷிகா, அன்கு வசித்து வந்தார்.

இந்நிலையில், மஞ்சு வீடு நேற்று மாலை நீண்டநேரமாக உள்பக்கமாக பூட்டப்பட்டிருந்தது. இதனால் சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர் மஞ்சு வீட்டின் கதவை தட்டியுள்ளனர். ஆனால், கதவை யாரும் திறக்காததால் சந்தேகமடைந்த அவர்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.

தகவலறிந்து, குடியிருப்பு பகுதிக்கு சென்ற போலீசார் வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அங்கு வீட்டின் ஒரு அறையில் மஞ்சு மற்றும் அவரின் மகள்களான அன்ஷிகா, அன்கு என 3 பேரும் பிணமாக கிடந்துள்ளனர். இதை கண்டு அதிர்ச்சியடைந்த போலீசார் 3 பேரின் உடலையும் மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். வீட்டில் இருந்த கியாஸ் சிலிண்டர் திறக்கப்பட்டு அதில் இருந்து கியாஸ் வாயு வீடு முழுவதும் வீசியுள்ளது. மேலும், வீட்டில் இருந்த தற்கொலை கடிதத்தையும் போலீசார் கைப்பற்றினர்.

மஞ்சுவின் கணவன் கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கொரோனா தாக்குதலால் உயிரிழந்தார். அதில் இருந்தே மஞ்சு மற்றும் இரு மகள்களும் மன அழுத்தத்தில் இருந்துள்ளனர். இதனால், இந்த தற்கொலை முடிவை எடுத்தனரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story