மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி


மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதல்; கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலி
x
தினத்தந்தி 22 Sep 2023 6:45 PM GMT (Updated: 22 Sep 2023 6:45 PM GMT)

பெங்களூருவில் நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாடி விட்டு திரும்பிய போது, மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி கல்லூரி மாணவர் உள்பட 2 பேர் பலியான பரிதாபம் நடந்துள்ளது. ஹெல்மெட் அணியாததால் இந்த சோக சம்பவம் நடந்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு சஞ்சய்நகரில் வசித்து வந்தவர் நிகில் (வயது 23). இவர், தனியார் கல்லூரியில் எம்.பி.ஏ. படித்து வந்தார். நிகிலின் தந்தை ஒரு தனியார் பல்கலைக்கழகத்தில் துணை வேந்தராக பணியாற்றி வருகிறார். நிகிலுக்கு நேற்று பிறந்தநாள் ஆகும். இதையடுத்து, நேற்று முன்தினம் நள்ளிரவு 12 மணிக்கு தன்னுடைய பிறந்தநாளை குடும்பத்தினருடன் கேக் வெட்டி நிகில் கொண்டாடி மகிழ்ந்தார்.

அதன்பிறகு, நண்பர்களுடன் பிறந்தநாள் கொண்டாட செல்வதாக வீட்டில் கூறிவிட்டு விலைஉயர்ந்த சொகுசு மோட்டார் சைக்கிளை எடுத்துக்கொண்டு நிகில் வெளியே புறப்பட்டுள்ளார். எம்.ஜி.ரோட்டில் உள்ள ஓட்டலில் நண்பர்களுக்கு அவர் விருந்து அளித்ததாக தெரிகிறது. பின்னர் அதிகாலை 3 மணியளவில் ஓட்டலில் இருந்து நிகில், அவரது நண்பர் மன்மோகன் (31) ஆகிய 2 பேரும் மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

யஷ்வந்தபுரம் மேம்பாலம் அருகே பி.எஸ்.என்.எல். அலுவலகத்தையொட்டி அதிகாலை 3.30 மணியளவில் வரும் போது திடீரென்று நிகிலின் கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் சாலையோர மின்கம்பத்தில் மோதியது.

இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிகில், மன்மோகன் ஆகியோர் தூக்கி வீசப்பட்டனர். இதில், தலையில் பலத்தகாயம் அடைந்த 2 பேரும் சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் பரிதாபமாக இறந்து விட்டனர். பிறந்தநாளில் தனது மகன் உயிர் இழந்து விட்டதாக கூறி நிகில் பெற்றோர் கதறி அழுதார்கள்.

நிகில் மற்றும் மன்மோகன் ஆகியோர் ஹெல்மெட் அணியாமல் சென்றதுடன், அதிவேகமாகவும், கவனக்குறைவாகவும் மோட்டார் சைக்கிளை ஓட்டியதே விபத்திற்கு காரணம் என்று யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர்.

நிகில் மதுஅருந்திவிட்டு மோட்டார் சைக்கிள் ஓட்டினாரா என்பது குறித்து விசாரித்து வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து யஷ்வந்தபுரம் போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.


Next Story