மும்பை: இந்திய கிரிக்கெட் அணியை வரவேற்க சென்ற 10 ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதி


மும்பை: இந்திய கிரிக்கெட் அணியை வரவேற்க சென்ற 10 ரசிகர்கள் மருத்துவமனையில் அனுமதி
x

இந்திய கிரிக்கெட் அணியை வரவேற்க சென்றதில் பல்வேறு ரசிகர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது.

மும்பை,

9-வது டி20 உலகக்கோப்பை தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி, தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான இறுதி போட்டியில் அதிரடியாக விளையாடி, கோப்பையை வென்று அசத்தியது. ரோகித் சர்மா தலைமையில் 17 வருடங்கள் கழித்து, இந்த சாதனை படைக்கப்பட்டு உள்ளது.

இந்நிலையில், இந்திய அணி வீரர்கள் தனி விமானம் மூலம் இன்று டெல்லி வந்தடைந்தனர். பிரதமர் மோடியை நேரில் சந்தித்தனர். அவர்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார்.

இதனை தொடர்ந்து இன்று மாலை மும்பையில் இந்திய வீரர்கள் பேரணியாக, திறந்த நிலையிலான பஸ்ஸில் டி20 உலகக்கோப்பையுடன் வெற்றி பேரணியாக வலம் வந்தனர். அவர்களை காண்பதற்காக, கொட்டும் மழைக்கு இடையே லட்சக்கணக்கான ரசிகர்கள் குவிந்தனர்.

இந்திய அணிக்காக இளைஞர்கள் பாடல்களை பாடியதுடன், பாரத் மாதா கி ஜெய் மற்றும் வந்தே மாதரம் போன்ற கோஷங்களையும் எழுப்பினர். இதேபோன்று, மரைன் டிரைவ் பகுதியின் சாலைகளில் இரு புறமும் ரசிகர்கள் குவிந்தனர்.

மும்பையின் மரைன் டிரைவ் பகுதியில் இருந்து வான்கடே மைதானம் வரை பேரணி நடைபெற்றது. வான்கடே மைதானத்திற்கு வீரர்கள் வந்ததும் கூடியிருந்த ரசிகர்கள் உற்சாக கோஷம் எழுப்பினர். மும்பையில் வீரர்களுக்கு வான்கடே மைதானத்தில் பாராட்டு விழா நடத்தப்பட்டது.

இதன்பின் வீரர்களுக்கு ரூ.125 கோடிக்கான காசோலையை பி.சி.சி.ஐ. வழங்கியது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் அணியை வரவேற்க சென்றதில் பல்வேறு ரசிகர்களுக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு காயம் ஏற்பட்டு உள்ளது. சிலருக்கு சுவாசிப்பதில் பாதிப்பு ஏற்பட்டது. 10 பேர் அருகேயுள்ள அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டனர்.

அவர்களில் 2 பேரில் ஒருவருக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு உள்ளது. மற்றொரு நபருக்கு சுவாச பாதிப்பு ஏற்பட்டு உள்ளது என மும்பை போலீசார் தெரிவித்து உள்ளனர்.


Next Story