மும்பை கனமழை எதிரொலி: 3,500 பேர் பாதுகாப்பான இடத்திற்கு மாற்றம்...
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது.
மும்பை:,
மும்பை மற்றும் அதன் புறநகர் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. கல்பாதேவி மற்றும் கயாவில் கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.
இந்தநிலையில் நேற்று இரவு மும்பை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால் தாழ்வான இடங்களில் வெள்ளம் தேங்கியது. பல பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. சயான், அந்தேரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் காணப்படுகிறது. இன்று காலையில் மழை பெய்ததால் தொடர்ந்து வெள்ளம் தேங்கியபடி இருந்தது. ரெயில் தண்டவாளங்களில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியதால் ரெயில்கள் புறப்படுவதில் தாமதம் ஏற்பட்டது
சாலைகளில் வெள்ளம் தேங்கியதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. வாகனங்களில் செல்வோர் தவித்தனர். ஊர்ந்தபடியே வாகனங்கள் சென்றன. தானே, நவி மும்பை பகுதிகளில் வெள்ளப் பாதிப்பு அதிகமாக இருந்தது. கடுமையான மழை காரணமாக பேரிடர் மீட்பு குழு மும்பை வாப் மீட்பு பணியில் ஈடுபட்டது.
தாழ்வான பகுதியில் இருந்த மக்களை 5 குழுக்கள் மீட்டு வருகிறது. கனமழை எதிரொலியாக 3. ஆயிரத்து 500 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர்.
மும்பை மற்றும் புறநகர் பகுதியான தானே மாவட்டத்துக்கு இந்திய வானிலை ஆய்வு மையம் 'மஞ்சள் அலர்ட்' எச்சரிக்கை விடுத்துள்ளது. 8-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வரை மும்பையில் பலத்த மழைக்கு வாய்ப்பு இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ராய்காட், ரத்னகிரி மற்றும் சில மாவட்டங்களுக்கு மிக கனமழை முதல் மிக கனமழைக்கான சிவப்பு' மற்றும் 'ஆரஞ்சு' எச்சரிக்கைகளை இந்திய வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ளது.