மராட்டிய சட்டமன்ற சபாநாயகர் தேர்தல்; சிவசேனா - பா.ஜனதா இடையே கடும் போட்டி!
மராட்டிய சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு நாளை தேர்தல் நடைபெற உள்ளது.
மும்பை,
மராட்டியத்தில் அரசியல் சூறாவளி சற்று தணிந்துள்ள நிலையில், புதிதாக ஏக்நாத் ஷிண்டே தலைமையில் பா.ஜனதா கூட்டணி அரசு பொறுப்பேற்றுள்ளது.
மராட்டிய சட்டமன்ற சபாநாயகர் பதவி ஒரு வருடத்திற்கும் மேலாக காலியாக உள்ளது.பிப்ரவரி 2021 இல் நானா படோல் ராஜினாமா செய்து, மராட்டிய பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகப் பொறுப்பேற்ற பிறகு, சட்டசபைக்கு துணை சபாநாயகராக இருந்த நர்ஹரி ஜிர்வால் கூடுதல் பொறுப்பேற்றுள்ளார்.
புதிதாக பொறுப்பேற்றுள்ள அரசாங்கம் ஜூலை-4ல், சட்டமன்றத்தில் பெரும்பான்மையை நிரூபிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து, மராட்டிய சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு நாளை ஜூலை 3ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது.
இந்த நிலையில், சபாநாயகர் பதவிக்கு சிவசேனா மற்றும் பா.ஜ.க எம்.எல்.ஏ.க்கள் இடையே கடும் போட்டி நிலவுகிறது.இந்த கூட்டணி அரசு தரப்பில், மராட்டிய சட்டமன்ற சபாநாயகர் பதவிக்கு பாஜக எம்.எல்.ஏ ராகுல் நர்வேகர் போட்டியிடுகிறார்.
அவருக்கு எதிராக உத்தவ் தாக்கரே தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் சேர்ந்த மாகாவிகாஸ் அகாடி கூட்டணி தரப்பில், சிவசேனா எம்.எல்.ஏ ராஜன் சால்வி போட்டியிடுகிறார். இன்று காலை ராஜன் சால்வி வேட்புமனு தாக்கல் செய்தார்.
சபாநாயகர் தேர்தல் குறித்து காங்கிரஸ் தலைவர் பாலாசாகேப் தோரட் கூறுகையில், "சிவசேனா எம்.எல்.ஏ ராஜன் சால்வி வேட்புமனுவை தாக்கல் செய்துள்ளோம். காங்கிரஸ் எம்.எல்.ஏ போட்டியிட முதலில் கோரிக்கை இருந்தது, ஆனால் நாங்கள் சிவசேனா மற்றும் என்சிபியுடன் ஆலோசித்து தற்போது ஒருமனதாக இந்த முடிவு ஒன்றாக எடுக்கப்பட்டது" என்றார்.