மும்பை: பைக்கின் பின் இருக்கையில் பயணிப்பவருக்கும் ஹெல்மெட் கட்டாயம்

மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் அணியவேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
மும்பை,
நாடு முழுவதும் சாலை விபத்துக்களில் ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழக்கின்றனர். சாலைவிபத்து மற்றும் உயிரிழப்புகளை தடுக்க மத்திய, மாநில அரசுக்கள் பல்வேறு நடவடிக்கை எடுத்து வருகின்றன.
இந்நிலையில், மராட்டிய மாநிலம் மும்பையில் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களும் ஹெல்மெட் கட்டாயம் அணிய வேண்டும் என மும்பை போக்குவரத்து போலீசார் உத்தரவிட்டுள்ளனர். இந்த நடைமுறை அடுத்த 15 நாட்களில் அமலுக்கு வரும் என போக்குவரத்து போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெல்மெட் கட்டாயம் விதியை மீறும் வாகன ஓட்டிகளுக்கு ரூ.500 அபராதம் மற்றும் 3 மாதத்திற்கு லைசன்ஸ் ரத்து செய்யப்படும் என்று மும்பை போலீசார் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலும் பைக்கின் பின் இருக்கையில் அமர்ந்து பயணிப்பவர்களுக்கு ஹெல்மெட் கட்டாயமாக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.