கள்ளக்காதல் விவகாரத்தில் கல்லால் தாக்கி தொழிலாளி கொலை
மண்டியா அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
மண்டியா:
மண்டியா அருகே, கள்ளக்காதல் விவகாரத்தில் தொழிலாளியை கல்லால் தாக்கி கொன்ற தம்பதியை போலீசார் கைது செய்தனர்.
கள்ளக்காதல் விவகாரம்
மண்டியா மாவட்டம் குனிகல் தாலுகா அஞ்சிபுரா கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ். இவரது மனைவி ரூபா. இருவரும் கூலி தொழில் செய்து வருகின்றனர். இதற்காக தம்பதி அதேப்பகுதியில் உள்ள காந்திபூங்கா பகுதியில் வசித்து வந்தனர். இவர்களுடன் கூலி தொழிலாளியான ரவி என்பவரும் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். இதில் ரவிக்கும், ரூபாவிற்கும் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசம் அனுபவித்து வந்ததாக கூறப்படுகிறது.
இதையறிந்த சுரேஷ், மனைவி ரூபா மற்றும் ரவியை கண்டித்தார். இதையடுத்து ரூபா, ரவியை சந்திப்பதை நிறுத்தி கொண்டார். ஆனால் ரவியால் ரூபாவை சந்திக்காமல் இருக்க முடியவில்லை. அடிக்கடி அவர் தனிமையில் இருக்கும்போது, திருமணம் செய்து கொள்ளலாம் என்று அழைத்துள்ளார். இதனால் கோபமடைந்த ரூபா, தனது கணவனிடம் கூறினார். அவர் மீண்டும் ரவியை கண்டித்தார். ஆனால் ரவி கேட்கவில்லை.
தொழிலாளி கொலை
இதனால் கோபத்தின் உச்சத்திற்கு சென்ற ரூபா-சுரேஷ் தம்பதி, ரவியை கொலை செய்ய திட்டமிட்டனர். அதன்படி கடந்த 1-ந் தேதி சுரேஷ், ரவியை மதுபானம் குடிக்க அழைத்தார். இருவரும் காந்திபூங்கா பகுதியில் வைத்து மது அருந்தினர்.
அப்போது மதுபோதை தலைக்கேறியதும் ரவியை சுரேஷ் மற்றும் அவரது மனைவி ரூபா ஆகியோர் சேர்ந்து கல்லால் தாக்கி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இது குறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான சுரேஷ், ரூபாவை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் தம்பதியை, போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.