பெங்களூருவில் அதிகரித்து வரும் காதல் கொலைகள்
பெங்களூருவில் காதல் கொலைகள் அதிகரித்து வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.
பெங்களூரு:
திருமண பந்தம் என்பது ஆணுக்கும், பெண்ணுக்கும் ஒரு உணர்வுப்பூர்வமானது. பாசம் காட்டுவதும், விட்டு கொடுத்தாலும் தான் திருமணம் செய்து கொள்ளும் ஆண், பெண்ணின் வாழ்க்கையை இனிமையாக்கு கின்றன. ஆனால் அம்மி மிதித்து அருந்ததி பார்த்து பெற்றோர்கள், உற்றார், உறவினர்கள் கலந்துபேசி முடிவு செய்து திருமணம் செய்து வைத்த காலம் மெல்ல மெல்ல நாகரிக வளர்ச்சியால் மருவி வருகிறது.
ஒருபுறம் காதலித்து திருமணம் செய்து கொள்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. மறுபுறம் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டுக்குள் வாழ்க்கை நடத்தும் லிவிங்க் டுகெதர் கலாசாரமும் மும்பை, பெங்களூரு, டெல்லி, சென்னை போன்ற பெருநகரங்களில் அதிகரித்து வருகிறது.
ஏனெனில் பெருநகரங்களில் வேலைக்காக வெளிமாநிலங்களை சேர்ந்த இளம்பெண்களும், வாலிபர்களும் தங்கியிருந்து வருகிறார்கள். அவர்கள் குடும்பத்தை விட்டு பிரிந்து வேலை நிமித்தமாக தாங்கள் வேலை பார்க்கும் இடத்திலேயே அறைகள் எடுத்து தங்கும் நிலை உள்ளது. இப்படிப்பட்ட சூழ்நிலையில் காதலில் விழும் இளம்பெண்ணும், வாலிபரும் தங்களது வீட்டினருக்கு தெரியாமல் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்து வருகிறார்கள்.
தாலி கட்டாமல் ேசர்ந்து வாழும் இத்தகைய காதல் ஜோடிகள் அன்பையும், நம்பிக்கையையும் மட்டுமே சாட்சியாக வைத்துக்கொண்டு இல்லறத்தில் பயணிக்க ெதாடங்குகிறார்கள். ஆனால் இத்தகைய நாகரிக இல்லற வாழ்வில் இருவரிடம் எழும் சந்தேகம், அபரிமிதமான ஆசை, குடும்பத் தகராறு அவர்களின் உயிரை காவு வாங்கும் சம்பவங்களும் சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. அதுவும் இவ்வாறு திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்பவர்களில் ஆணோ, பெண்ணோ தனது துணையை கொலை செய்யும் அளவுக்கு சென்றுவிடுவது காலக்கொடுமை தான்.
7 காதல் கொலைகள்
இதுபோன்ற காதல் கொலைகள் பெங்களூருவில் அதிகரித்து வருகிறது. கர்நாடக தலைநகர் பெங்களூருவில் ஐ.டி. நிறுவனங்கள் அதிகம் உள்ளன. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்தவர்களும் வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக பெங்களூருவுக்கு வருகின்றனர். அவ்வாறு வருபவர்கள், பணி செய்யும் இடத்திலோ, அண்டை குடியிருப்பு பகுதியிலோ வசித்து வருபவர்கள் மீது காதல் வயப்படுகின்றனர். பின்னர், குடும்பத்தினருக்கு தெரியாமல் தனியே வீடு எடுத்து திருமணம் செய்து கொள்ளாமல் (லிவிங்க் டு கெதர்) ஒன்றாக வசித்து வருகின்றனர்.
அப்போது ஏற்படும் சந்தேகங்கள், வாக்குவாதங்கள் இறுதியில் கொலையில் போய் முடிகிறது. அதுபோன்ற சம்பவங்கள் டெல்லி, மும்பை போன்ற பெருநகரங்களில் நடந்து வந்தது. ஆனால் அண்மை காலமாக பெங்களூருவில் இதுபோன்ற கொலைகள் அரங்கேற தொடங்கி உள்ளன. பெங்களூருவில் கடந்த 8 மாதங்களில் மட்டும் 7 காதல் கொலைகள் நடந்து இருப்பது தெரியவந்துள்ளது.
பிறந்த நாளில்...
அதாவது பெங்களூரு அசோக்நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வந்தவர் நதீம் பாஷா. இவர் கவுசர் என்ற பெண்ணுடன் திருமணம் செய்து கொள்ளாமல் ஒரே வீட்டில் வசித்து வந்தார். அப்போது தனது காதலியின் பிறந்தநாள் அன்று தங்கச்சங்கிலி வாங்குவதற்கு பதிலாக வெள்ளி சங்கிலி வாங்கி கொடுத்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஏற்பட்ட வாக்குவாதத்தின்போது ஆத்திரத்தில் நதீம் பாஷா, தனது காதலியை கத்தியால் குத்திக்கொலை செய்தார். தற்போது அவர் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இதேபோல் அம்ருதஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் விக்டர் மற்றும் சுலேமா என்ற காதல் ஜோடி திருமணம் செய்து கொள்ளாமல் ஒன்றாக வசித்து வந்தனர். அப்போது சுலேமாவின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டதை அடுத்து, அதுகுறித்து அவர் தனது காதலியிடம் கேட்டுள்ளார். அப்போது வாக்குவாதம் முற்றிய நிலையில் அவர் தனது காதலியை பலமுறை கத்தியால் குத்தி படுகொலை செய்தார்.
இதேபோல் ஞானபாரதி பகுதியில் அருண் என்ற முன்னாள் காதலனை, தனது கூட்டாளியுடன் சேர்ந்து இளம் பெண் ஒருவர் கொலை செய்தார். இதுதொடர்பாக மத்திய குற்றப்பிரிவு போலீசார் இளம்பெண் உள்பட 2 பேரை கைது செய்தனர்.
தூக்கில் தொங்கவிட்டார்
பரப்பன அக்ரஹாரா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில், ஒன்றாக வசித்து வந்த சுனிதா மற்றும் பிரசாந்த் ஆகியோர் இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஆத்திரத்தில் சுனிதாவின் கழுத்தை அவரது காலதன் பிரசாந்த் நெரித்து கொன்றார். மேலும் காதலியின் உடலை தூக்கில் தொங்கவிட்டார். மேலும் சந்தோஷ் என்பவர், தனது காதலி கிருஷ்ண குமாரியின் நடத்தையில் சந்தேகம் ஏற்பட்டு, அவரை இரும்பு கம்பியால் தாக்கி கொலை செய்தார். இதுதொடர்பாக சந்தோஷ் கைது செய்யப்பட்டார்.
இந்த சம்பவம் தொடர்பாக ராமமூர்த்தி நகர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ஜீவன்பீமாநகர் பகுதியில் வசித்து வந்த அர்பித் என்ற வாலிபர், தனது காதலி அகன்ஷாவை கழுத்தை நெரித்து கொன்றார். இதேபோல் அண்மையில் பசவேஷ்வராநகர் பகுதியில் தனது காதலி நாகரத்தினாவை, கத்தியால் குத்தி அய்யப்பா என்பவர் கொன்றார். இதுதொடர்பாக அவர் தற்போது கைது செய்யப்பட்டு உள்ளார். இதுபோல் டெல்லி, மும்பையில் திருமணம் செய்து கொள்ளாமல் வாழ்ந்த காதலிகளை வாலிபர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவங்களும் நடந்தன.
இதுபோன்ற காதல் கொலைகள் நடைபெறாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும் என்பது தொடர்பாக வக்கீல்கள் உள்ளிட்ட சிலரிடம் கருத்து கேட்டோம். அதன் விவரம் பின்வருமாறு:-
சட்டம் கொண்டு வர வேண்டும்
இதுகுறித்து பெங்களூருவை சேர்ந்த வக்கீல் பாலாஜிசிங் கூறியதாவது:-
திருமணம் செய்து கொள்ளாமல் ஆண்-பெண் சேர்ந்து வாழும் கலாசாரம் அதிகரித்து வருகிறது. இது நமது பாரம்பரியமான கலாசாரத்திற்கு எதிரானது. சொந்த விருப்பத்தின் பேரில் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும்போது, அவர்களுக்குள் பல்வேறு பிரச்சினைகள் ஏற்படுகின்றன. உடலுறவு கொள்வது உள்ளிட்ட பல விஷயங்களில் இருவருக்கும் மனக்கசப்பு ஏற்படும். தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி பெண் வற்புறுத்துவார். அதில் விருப்பம் இல்லாதபோது, இருவருக்கு இடையேயும் பிரச்சினை அதிகரித்து, ஒரு கட்டத்தில் அது கொலையில் முடிகிறது.
இது ஓரிரு நாளில் நடைபெறக்கூடிய பிரச்சினையால் ஏற்படும் சம்பவங்கள் அல்ல. நீண்ட நாட்கள் அவர்களுக்குள் பிரச்சினை ஏற்படும். சில நேரங்களில் தாம்பத்யத்தில் திருப்தி ஏற்படாத போதும் இருவருக்குள்ளும் பிரச்சினை ஏற்பட்டு கொலை நடைபெறுவது உண்டு. சமுதாயத்தில் இத்தகைய விஷயம் ஒரு மோசமான சூழ்நிலையை ஏற்படுத்துகிறது. குழந்தைகளை வளர்க்கும்போது, பெற்றோர் நமது கலாசாரம், பண்பாட்டை சொல்லிக்கொடுத்து வளர்க்க வேண்டும்.
அவ்வாறு செய்தால், குழந்தைகள் இத்தகைய தவறான கலாசாரத்தை நாட மாட்டார்கள். திருமணம் செய்யாமல் ஆணும், பெண்ணும் சேர்ந்து வாழும் வாழ்க்கை நீண்ட நாட்களுக்கு நீடிப்பது இல்லை என்பதால், அதில் பெண் தான் அதிகமாக பாதிக்கப்படுகிறார். அதனால் இந்த திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் கலாசாரம் நமது நாட்டுக்கு சரிவராது. இந்த கலாசாரத்தை தடுக்க சட்டம் கொண்டு வரலாம்.
இவ்வாறு பாலாஜிசிங் கூறினார்.
சுதந்திர பறவைகள்...
ெபங்களூரு ராஜாஜிநகரை சேர்ந்த வக்கீல் சசிகுமார் கூறியதாவது:-
இந்தியாவில் பெற்றோர் முன்னிலையில் திருமணம் செய்து இல்லற வாழ்க்கை நடத்தும் நடைமுறை தான் உள்ளது. மேற்கத்திய நாகரிகம் இன்று நமது நாட்டுக்குள் புகுந்து விட்டது. இதே கருத்துக்கள் திரைப்படங்கள், நாடகங்களிலும் காட்சிப்படுத்தப்படுகிறது. இதனால் இன்றைய இளம் தலைமுறையினர் அந்த மேற்கத்திய கலாசாரத்தில் தங்களை அடையாளப்படுத்தி வாழ முயற்சிக்கிறார்கள்.
இதன் விளைவு தான் திருமணம் செய்துகொள்ளாமல் வாழும் கலாசாரம். இவ்வாறு வாழும் ஆணும், பெண்ணும் தங்களை சுதந்திர பறவைகளாக கருதுகிறார்கள். அதனால் அவர்கள் இடையே ஏற்படும் சிறு, சிறு பிரச்சினைகளையும், மனஸ்தாபங்களையும் தீர்த்து வைக்க ஆள் இல்லை. இந்த பிரச்சினைகள் பூதாகரமாக வெடிக்கும் போது கொலை சம்பவங்கள் நடக்கிறது.
அதுபோல் முன்பு கணவன், மனைவி என்ற உறவு புனிதமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று அப்படி இல்லை. ஒரு ஆண் பெண்ணையோ, ஒரு பெண் ஆணையோ மதிப்பது இல்லை. பெங்களூரு போன்ற பெருநகரங்களில் ஆணும், பெண்ணும் வேலைக்கு சென்று வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊரை விட்டுவிட்டு வெளியூர்களில் தங்கியிருந்து வேலை செய்வதால், பெற்றோர்களுக்கு தெரியாமல் வாழும் நிலை உள்ளது. இதனால் தான் இவ்வாறு வாழ்கிறவர்கள் இடையே எழும் பிரச்சினை கொலையில் முடிகிறது. இதுபோன்ற கொலைகளை தடுக்க பெற்றோர் சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு நமது கலாசாரத்தை, பண்பாட்டை கற்றுக்கொடுக்க வேண்டும். மேலும் இதுபோன்ற கலாசாரத்தை தடுக்க அரசும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
காவு வாங்கும் கலாசாரம்
இதுகுறித்து பெங்களூரு மல்லேசுவரம் வர்மக்கலை மருத்துவர் லட்சுமி கூறியதாவது:-
ஒரு ஆணும், பெண்ணும் இப்படி தான் வாழ்க்கையை வாழ வேண்டும் என்று நம் முன்னோர்கள் வழிவகுத்து ெகாடுத்துள்ளனர். ஆனால் நாகரிக மோகத்தால், நாங்கள் இப்படி தான் வாழ்வோம் என மனம்போன போக்கில் வாழும் முறை தான், திருமணம் செய்து கொள்ளாமல் சேர்ந்து வாழும் கலாசாரம்.
பெற்றோர்கள் முன்னிலையில் நடைபெறும் திருமண வாழ்க்கையிலேயே பல ஆயிரம் சிக்கல்கள் வருவது உண்டு. அதனை பெற்றோர், உற்றார், உறவினர்கள் துணையுடன் சரி செய்து கொள்ள முடியும். ஆனால் இதில் இருந்து மாறுபட்டு யாருடைய துணையும் வேண்டாம், எங்கள் உறவை பற்றி யாரும் தெரிந்து கொள்ள வேண்டாம் என கூறி வாழும் இதுபோன்றவர்கள் தன்னை காவு வாங்கும் கலாசாரம் என்பதை அறிவதில்லை. இத்தகைய வாழ்க்கை முறையில் பாதுகாப்பு இருப்பது இல்லை. திட்டமிடல் இருப்பது இல்லை. நம்பிக்கையும் இருப்பது இல்லை. இருவரிடமும் நிலையான தன்மை இருப்பது இல்லை. இதனால் தான் இந்த வாழ்க்கை முறையில் கொலைகள் அதிகரித்து வருகிறது. இதை தடுக்க அரசு சட்டம் இயற்றி நடவடிக்கை எடுத்தாலும், அதை இன்றைய இளம்தலைமுறையினர் கடைப்பிடித்தால் மட்டுமே இதுபோன்ற கொலைகளை தடுக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.