பெங்களூருவில் சொத்துக்காக தாயை கொல்ல முயன்றவர் கைது
பெங்களூருவில் சொத்துக்காக தாயை கொல்ல முயன்றவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு ஆர்.டி.நகர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் வசித்து வருபவர் கியாபிரின்(வயது 88). இவருக்கு 3 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். 2 மகன்கள் அமெரிக்காவில் வசிக்கிறார்கள். மற்றொரு மகன் ஜான் (64) என்பவர் மட்டும் பெங்களூருவில் வசித்து வருகிறார். கியாபிரின் பெயரில் பல கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளது. அதனை தனக்கு கொடுக்கும்படி தாயுடன், ஜான் அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, ஜான் பெயருக்கு தனது சொத்துகளை கியாபிரின் எழுதி கொடுத்திருந்தார். இதற்கிடையில், அவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டதால், அமெரிக்காவில் வசிக்கும் மகன் தனது தாயை பார்த்து கொள்ள ஒரு பெண் உதவியாளரை வீட்டில் வேலைக்கு அமர்த்தினார்.
இந்த நிலையில் தாய் உயிருடன் இருக்கும் வரை சொத்துகளை அனுபவிக்க முடியாது என கருதிய ஜான், பெண் உதவியாளரை வெளியே அனுப்பி வைத்துவிட்டு, கியாபிரின் முகத்தில் பொருத்தப்பட்டு இருந்த ஆக்சிஜன் குழாயை எடுத்துள்ளார். இதனால் அவர் உயிருக்கு போராடியுள்ளார். இதுபற்றி பெண் உதவியாளர் கொடுத்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு ஆர்.டிநகர் போலீசார் விரைந்து வந்து கியாபிரினை காப்பாற்றினார்கள். இதுகுறித்து ஆர்.டி.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜானை கைது செய்துள்ளனர்.