தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்ததால் பெண்ணை சரமாரியாக தாக்கிய உறவினர் - அதிர்ச்சி சம்பவம்
தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதை சமினா கொண்டாடியுள்ளார்.
போபால்,
மத்தியபிரதேச சட்டசபை தேர்தலில் அபார வெற்றிபெற்று பாஜக ஆட்சியை தக்கவைத்துள்ளது. தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதை அக்கட்சி தொண்டர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே, அம்மாநிலத்தின் சிஹொரி மாவட்டம் அகமத்பூர் பகுதியை சேர்ந்தவர் சமினா (வயது 30). இஸ்லாமிய மதத்தை சேர்ந்த இவர் பாஜக ஆதரவாளர் ஆவார். சமினா நடந்துமுடிந்த சட்டசபை தேர்தலில் பாஜகவுக்கு வாக்களித்துள்ளார். மேலும், தேர்தலில் பாஜக வெற்றிபெற்றதையடுத்து அந்த வெற்றியை சமினா கொண்டாடியுள்ளார்.
ஆனால், சமினா பாஜகவுக்கு வாக்களித்ததையும், அக்கட்சி வெற்றிபெற்றதை அவர் கொண்டாடியதையும் சமினாவின் மைத்துனன் ஜாவித் கான் விரும்பவில்லை. மேலும், சமினாவை ஜாவித் கான் தகாத வார்த்தைகளால் திட்டியுள்ளார். தன்னை திட்டியது குறித்து கேட்டபோது சமினாவை ஜாவித் கான் சரமாரியாக தாக்கியுள்ளார். தொடர்ந்து பாஜகவுக்கு ஆதரவாக வாக்களித்தால் கடுமையான விளைவுகளை சந்திக்க நேரிடும் எனவும் சமினாவை எச்சரித்துள்ளார்.
இதனை தொடர்ந்து பாஜகவுக்கு வாக்களித்ததால் தன்னை சரமாரியாக தாக்கிய மைத்துனன் ஜாவித் கான் மீது சமினா போலீசில் புகார் அளித்தார். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.