கர்நாடக மக்களின் விருப்பத்திற்காக எனது தந்தையே முதல்-மந்திரி ஆக்கப்பட வேண்டும்; சித்தராமையா மகன் பேட்டி
ஒரு மகனாக, அவரை முதல்-மந்திரியாக பார்க்க நிச்சயம் நான் ஆசைப்படுகிறேன் என்று சித்தராமையாவின் மகன் நிருபர்களிடம் இன்று கூறியுள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை பலத்த பாதுகாப்புடன் இன்று காலை 8 மணி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில், காங்கிரஸ் கட்சி 138 இடங்களிலும், பா.ஜ.க. 62 இடங்களிலும் மற்றும் ம.ஜ.த. 20 இடங்களிலும் முன்னிலை வகித்து வருகிறது.
இதன் மூலம் முன்னிலையில் உள்ள காங்கிரஸ் கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுன் ஆட்சி அமைக்க உள்ளது. கர்நாடகாவில் காங்கிரஸ் ஆட்சியை கைப்பற்றியுள்ள நிலையில் நாடு முழுவதும் காங்கிரஸ் கட்சியினர் பட்டாசு வெடித்தும், இனிப்பு வழங்கியும் கொண்டாடி வருகின்றனர்.
இதனிடையே கர்நாடகாவின் அடுத்த முதல் மந்திரி யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது. காங்கிரஸ் கட்சி இதுவரை முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவுகிறது. முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறியுள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் வெற்றி பெற்று தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏ.க்களுடன் நடைபெறும் கூட்டத்தில், முதல்-மந்திரி வேட்பாளர் பற்றிய அவர்களின் கருத்துகளை, கட்சி தலைவர் கார்கே கேட்டு பெறுவார் என கூறப்படுகிறது.
காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மைக்கான எண்ணிக்கையை விட கூடுதலான இடங்களில் தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது. அதனால், கர்நாடகாவில் அரசமைக்கும் அனைத்து வேலைகளிலும் அக்கட்சி ஈடுபட்டு வருகிறது.
தேர்தல் வெற்றி பற்றி கர்நாடகாவின் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையாவின் மகன் யதீந்திர சித்தராமையா செய்தியாளர்களிடம் இன்று பேசும்போது, காங்கிரஸ் முழு அளவில் பெரும்பான்மை பெறும்.
கர்நாடகாவில் ஆட்சியையும் அமைக்கும். நாங்கள் தனித்து ஆட்சி அமைப்போம் என்பதில் அதிக நம்பிக்கையுடன் இருக்கிறோம் என கூறினார்.
பா.ஜ.க.வை ஆட்சியில் இருந்து அகற்ற நாங்கள் என்ன வேண்டுமென்றாலும் செய்வோம். வருணா தொகுதியில் தனது தந்தை அதிக ஓட்டுகள் முன்னிலையுடன் வெற்றி பெறுவார் என கூறியதுடன், ஒரு மகனாக, நிச்சயம் அவரை முதல்-மந்திரியாக பார்க்க நான் ஆசைப்படுகிறேன் என்றும் சித்தராமையாவின் மகன் நிருபர்களிடம் பேசும்போது கூறியுள்ளார்.
கடந்த முறை கடைசியாக அவர் ஆட்சி செய்தபோது, நல்ல நிர்வாகம் நடைபெற்றது. இந்த முறையும், அவர் முதல்-மந்திரியாக ஆனால், பா.ஜ.க. ஆட்சியில் இருந்த ஊழல் மற்றும் தவறான ஆட்சி முறை ஆகியன சரி செய்யப்படும். கர்நாடகாவின் விருப்பத்திற்காகவும் கூட, எனது தந்தையே முதல்-மந்திரி ஆக்கப்பட வேண்டும் என்று அவர் கூறியுள்ளார்.