நாகாலாந்து: தேர்தல் அதிகாரிகளை ஏற்றி சென்ற வாகனம் விபத்து; ஒருவர் பலி, 13 பேர் காயம்


நாகாலாந்து: தேர்தல் அதிகாரிகளை ஏற்றி சென்ற வாகனம் விபத்து; ஒருவர் பலி, 13 பேர் காயம்
x

நாகலாந்தில் தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை ஏற்றி சென்ற வாகனம் விபத்தில் சிக்கியதில் ஒருவர் உயிரிழந்து உள்ளார்.


ஒகா,


60 தொகுதிகளை கொண்ட நாகாலாந்து சட்டசபைக்கான தேர்தல் இன்று காலை 7 மணி முதல் தொடங்கி விறுவிறுப்புடன் நடந்து வருகிறது. மதியம் 1 மணி நிலவரப்படி 57.06 சதவீத வாக்குகள் பதிவாகி உள்ளன.

வாக்கு பதிவின்போது, வன்முறை பரவி விடாமல் இருக்க பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. தேர்தலை முன்னிட்டு ஒகா மாவட்டத்தில் பஸ் ஒன்று தேர்தல் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு படையினரை ஏற்றி கொண்டு சென்றது.

அந்த பஸ் மலை பகுதியில் செல்லும்போது, திடீரென உருண்டு வன பகுதியில் விழுந்தது. இந்த விபத்தில் பஸ்சின் ஓட்டுனர் உயிரிழந்து உள்ளார். 13 பேர் காயம் அடைந்தனர். அவர்களில் 8 பேர் ஜார்க்கண்ட் ஆயுத படை போலீசார் ஆவர். ஒருவர் நாகாலாந்து ஆயுத படையை சேர்ந்த காவலர் ஆவார்.

இதனை நாகாலாந்து டி.ஜி.பி. உறுதி செய்து உள்ளார். நாகாலாந்தில் சட்டசபை தேர்தலுக்கான வாக்குப்பதிவில், பெண்கள், முதியவர்கள் என அனைத்து தரப்பு வாக்காளர்களும் ஆர்வத்துடன் வாக்களித்து வருகின்றனர்.

இதற்காக காலையிலேயே வாக்காளர்கள் நீண்ட வரிசையில் நின்று தங்களது வாக்குகளை பதிவு செய்து ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். வாக்குப்பதிவு மாலை 4 மணி வரை நடக்கிறது.

நாகாலாந்தில் அகுலுடோ தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளரான கெகாஷி சுமி தனது வேட்பு மனுவை வாபஸ் பெற்ற நிலையில், போட்டியிடாமலேயே பா.ஜ.க. வேட்பாளரான கஜிடோ கினிமி வெற்றி பெற்று உள்ளார்.

இந்த தேர்தலில் போட்டியிடும் 183 வேட்பாளர்களில் 4 பேர் பெண்கள் ஆவர். மொத்தமுள்ள 13.17 லட்சம் வாக்காளர்களில் 6.61 லட்சம் பேர் ஆண்கள். 6.56 லட்சம் பேர் பெண்கள் ஆவர். தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை வருகிற மார்ச் 2-ந்தேதி நடைபெறும்.


Next Story