மராட்டியத்தில் ரூ.30 லட்சம் கேட்டு பள்ளி முதல்வர் கடத்தல்..!
மராட்டிய மாநிலம் நாக்பூரில் ரூ.30 லட்சம் கேட்டு பள்ளி முதல்வரை மர்ம நபர்கள் கடத்திவைத்துள்ளனர்.
நாக்பூர்,
மகாராட்டிய மாநிலம் நாக்பூரில் ஜரிபட்கா பகுதியில் அமைந்துள்ள மகாத்மா காந்தி தொடக்கப் பள்ளியின் முதல்வர் பிரதீப் மோதிரமணி.
50 வயதான பிரதீப் மோதிரமணி, வெள்ளிக்கிழமை இரவு தனது வீட்டில் இருந்து இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். இரவு வெகு நேரமாகியும் அவர் வீடு திரும்பாததால், அவரது மகள் மொபைல் போனில் அவரை தொடர்பு கொண்டார்.
அப்போது மர்மநபர் ஒருவர் உனது தந்தையை கடத்தி வைத்துள்ளோம் என்றும், ரூ.30 லட்சம் கொடுத்தால் மட்டுமே உனது தந்தை வீட்டிற்கு வருவார் என்றும் தெரிவித்துள்ளார்.
இதை கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது மகள் உடனடியாக ஜரிபட்கா காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், பள்ளி முதல்வரின் செல்போன் மற்றும் இரு சக்கர வாகனங்கள் இருக்கும் பகுதியை கண்காணித்து கடத்தல்காரர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.