நாடு முழுவதும் நடந்த ரெயில் மறியல் போராட்டம் வெற்றி; சர்வான் சிங் பாந்தர்


நாடு முழுவதும் நடந்த ரெயில் மறியல் போராட்டம் வெற்றி; சர்வான் சிங் பாந்தர்
x

நாடு முழுவதும் 6 மாநிலங்களில் இந்த ரெயில் மறியல் போராட்டம் நடத்தப்பட்டு, வெற்றி பெற்றுள்ளது என விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று கூறியுள்ளார்.

அமிர்தசரஸ்,

வேளாண் விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு உத்தரவாதம் அளிப்பது, கடன் தள்ளுபடி, ஓய்வூதியம் உள்ளிட்ட பல்வேறு அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டெல்லி சலோ என்ற பெயரில் 3 ஆண்டுகளுக்கு பின்னர் விவசாயிகள் மீண்டும் போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர். இதன்படி, கடந்த பிப்ரவரி முதல் வாரத்தில் அவர்களின் போராட்டம் தொடங்கியது.

விவசாய சங்கத்தினர் மத்திய மந்திரிகளுடன் 8, 12, 15 மற்றும் 18 ஆகிய நாட்களில் பேச்சுவார்த்தைகள் நடத்தினர். எனினும், அது தோல்வியிலேயே முடிந்தது. தொடர்ந்து போராட்டம் நீடித்து வருகிறது. இதன் ஒரு பகுதியாக விவசாயிகள் நேற்று ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுபற்றி விவசாய சங்க தலைவர் சர்வான் சிங் பாந்தர் இன்று கூறும்போது, நாடு முழுவதும் நடந்த ரெயில் மறியல் போராட்டம் வெற்றி அடைந்துள்ளது. நேற்று மதியம் 12 மணி முதல் 4 மணி வரை 6 மாநிலங்கள் முழுவதும் இந்த மறியல் போராட்டம் நடந்தது.

விவசாயிகள் போராட்டம் தொடங்கியதில் இருந்து அதிக வெற்றியடைந்த போராட்டம் இதுவாகும் என்று கூறினார். எங்களின் செயல் திட்டம் சார்ந்த விசயங்கள் முன்னோக்கி பயணித்து வரும் சூழலில், விரைவில் கூட்டமொன்றை நடத்தி விரிவாக விளக்குவோம். எங்களுடைய இரு அமைப்புகளாலும் இந்த கூட்டத்தில் இறுதி முடிவானது எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளார்.


Next Story