மும்பையில் ரூ.50 கோடி போதைப்பொருள், ரொக்கம் பறிமுதல்


மும்பையில் ரூ.50 கோடி போதைப்பொருள், ரொக்கம் பறிமுதல்
x

மும்பையில் ரூ.50 கோடி போதைப்பொருள், ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

மும்பை டோங்கிரி பகுதியை சேர்ந்த சில வீடுகளில் அதிகளவில் போதைப்பொருள் பதுக்கி வைக்கப்பட்டு அவை விற்பனை செய்யப்பட்டு வருவதாக ஒர்லி போதைப்பொருள் தடுப்பு பிரிவு (என்.சி.பி.) போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இந்த தகவலின்பேரில் முதலில் கான் என்பவரின் வீட்டிற்கு சென்று போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் அங்கு மறைத்து வைக்கப்பட்டு இருந்த 2 கிலோ எடையுள்ள எம்.டி. போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டு, பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்ந்து அதேபகுதியை சேர்ந்த அலி என்பவருடைய வீட்டில் சோதனை செய்தனர். அங்கிருந்து 3 கிலோ எடையுள்ள எம்.டி. போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டது. அதேபோல சேக் என்ற பெண்ணின் வீட்டில் நடத்திய சோதனையில், 15 கிலோ எடையுள்ள எம்.டி போதைப்பொருள் மற்றும் ரூ.1 கோடியே 10 லட்சம் ரொக்கம், 186 கிராம் தங்கநகைகளை பறிமுதல் செய்தனர்.

3 பேரின் வீட்டில் இருந்தும் மொத்தம் 20 கிலோ எடையுள்ள எம்.டி. போதைப்பொருள், ரொக்கம், நகைகள் சிக்கி உள்ளது. இவற்றின் மொத்த மதிப்பு ரூ.50 கோடி ஆகும். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர்.

இவர்கள் கடந்த 10 ஆண்டாக போதைப்பொருள் கடத்தி பல மாநிலங்களுக்கு விற்று கோடிக்கணக்கில் பணம் சம்பாதித்து சொகுசு வாழ்க்கை வாழ்ந்து வந்தது தெரியவந்தது. போதைப்பொருள் கடத்தலில் மேலும் பலருக்கு தொடர்பு இருக்கும் என்று போலீசார் கருதுகின்றனர்.


Next Story