மக்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள் - எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை


மக்களுடன் அதிக நேரம் செலவிடுங்கள் - எம்.பி.க்களுக்கு பிரதமர் மோடி அறிவுரை
x

எம்.பி.க்கள் தொகுதிகளுக்கு சென்று மக்களுடன் அதிக நேரம் செலவிட வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

புதுடெல்லி,

தேசிய ஜனநாயக கூட்டணியை சேர்ந்த எம்.பி.க்கள், 11 குழுக்களாக பிரிந்து பிரதமர் மோடியை சந்தித்து வருகின்றனர்.

அந்த வகையில் உத்தரபிரதேசத்தை சேர்ந்த எம்.பி.க்கள் இன்று மோடியை சந்தித்து கலந்துரையாடினர். அப்போது மோடி பேசியதாக வெளியான தகவலின்படி,

எம்.பி.க்கள் அனைவரும் தங்களது தொகுதிகளுக்கு சென்று, உள்ளூர் பிரச்சினைகள் பற்றி பேச வேண்டும். மக்கள் அதிகம் கூடும், திருமணம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்க வேண்டும். மக்களுடன் அதிக நேரம் செலவிடுவதுடன், அதிருப்தி, கோபத்தில் இருப்பவர்களை சமாதானப்படுத்த வேண்டும். காங்கிரஸ் கூட்டணி போல், தேசிய ஜனநாயக கூட்டணி சுயநலத்தில் உருவானது அல்ல. தியாகத்தால் உருவானது.

இதற்கு உதாரணமாக, பீகாரில் அதிகாரத்தை விட்டுக்கொடுத்ததை கூறலாம். பீகாரில் பாஜகவுக்கு அதிக எம்.எல்.ஏ.க்கள் கிடைத்த போதும் முதல்-மந்திரி பதவியை நிதிஷ்குமாருக்கு விட்டு கொடுத்தோம். ஆனால், நிதிஷ்குமார் கூட்டணியை முறித்து விட்டு எதிர்க்கட்சி கூட்டணியில் சேர்ந்து விட்டார்.

பஞ்சாப்பில், அகாலிதளம் கூட்டணி ஆட்சியின் போது, அதிக எம்.எல்.ஏ.க்கள் வைத்திருந்த போதும் துணை முதல்-மந்திரி பதவியை பாஜக கேட்கவில்லை. இதுவும் மற்றொரு உதாரணம். இவ்வாறு மோடி பேசியதாக அந்த தகவல்கள் தெரிவித்து உள்ளன.

தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, அந்தமான் நிகோபர் தீவுகளை சேர்ந்த 96 எம்.பி.க்கள் நாளை மோடியை சந்திக்க உள்ளனர்.

"நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்னதாக கூட்டணிக்குள் அதிக ஒற்றுமை மற்றும் ஒருங்கிணைப்பை உறுதி செய்வதற்காக இந்த சந்திப்புகள் நடைபெறுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


Next Story