உல்லால் அருகே, குடும்ப தகராறில் தூக்குப்போட்டு பெண் தற்கொலை; கணவர் கைது
உல்லால் அருகே குடும்ப தகராறு காரணமாக பெண் தூக்குப்ேபாட்டு தற்கொலை செய்துகொண்டார். இதுதொடர்பாக அவரது கணவர் கைது செய்யப்பட்டார்.
மங்களூரு;
குடும்ப தகராறு
தட்சிண கன்னடா மாவட்டம் மங்களூரு அருகே உள்ள உல்லால் போலீஸ் எல்லைக்குட்பட்ட மில்லத் நகர் பகுதியைச் சேர்ந்தவர் இர்பான். இவரது மனைவி ஜம்சீரா (வயது 25). இந்த தம்பதிக்கு திருமணமாகி 8 மாத பெண் குழந்தை உள்ளது. இர்பான் பைக்கம்பாடியில் உள்ள மீன் தொழிற்சாலையில் கூலி தொழிலாளியாக வேலை செய்து வருகிறார்.
இந்த நிலையில் இர்பானுக்கும், அவரது மனைவி ஜம்சீராவுக்கும் இடையே கடந்த சில நாட்களாக குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஜம்சீரா மனமுடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் கணவன், மனைவி இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, தகராறாக மாறியுள்ளது. இதனால் இா்பான் கோபித்து கொண்டு வீட்டிலிருந்து வெளியே சென்றுவிட்டார்.
தூக்குப்போட்டு தற்கொலை
இந்த நிலையில் ஜம்சீரா, தற்கொலை செய்து கொள்ள முடிவு செய்தார். இதையடுத்து வீட்டில் உள்ள ஒரு அறையில், மின்விசிறியில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அப்போது வீட்டிற்கு திரும்பி வந்த இர்பான், மனைவி தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
பின்னர் அக்கம் பக்கத்தினர் உதவியுடன் ஜம்சீராவை மீட்டு ஆஸ்பத்திரிக்கு தூக்கி சென்றனர். இதையடுத்து ஆஸ்பத்திரியில் ஜம்சீராவை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினர்.
போராட்டம்
இதுகுறித்து ஜம்சீராவின் உறவினர்கள் உல்லால் போலீசாருக்கு தகவல் அளித்தனர். அந்த தகவலின் பேரில் விரைந்து வந்த போலீசார், அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் ஜம்சீராவின் உறவினர்கள், இர்பான் தான் தனது மனைவியை கொலை செய்தார் என கூறி போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
இதையடுத்து போலீசார், இர்பானை சந்தேகத்தின்ேபரில் கைது செய்தனர். மேலும் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். உறவினர்களின் இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.