இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் 5 கோடி வழக்குகள் - சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ


இந்தியா முழுவதும் கோர்ட்டுகளில் நிலுவையில் 5 கோடி வழக்குகள் - சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ
x

இந்தியா முழுவதும் சுமார் 5 கோடி வழக்குகள் கோர்ட்டுகளில் நிலுவையில் இருப்பதாக சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ கவலை தெரிவித்துள்ளார்.

பட்டமளிப்பு விழா

மராட்டிய மாநிலம் அவுரங்காபாத்தில் உள்ள தேசிய சட்ட பல்கலைக்கழகத்தின் முதலாவது பட்டமளிப்பு விழா நடந்தது. இதில் மத்திய சட்ட மந்திரி கிரண் ரெஜிஜூ சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.

இந்த விழாவில் பேசும்போது அவர் கூறியதாவது:-

நீதித்துறையின் தரம்

இந்திய நீதித்துறையின் தரம் உலகறிந்தது. 2 நாட்களுக்கு முன்பு நான் இங்கிலாந்து நீதித்துறையை சேர்ந்த சிலரை லண்டனில் சந்தித்தேன். அப்போது இந்திய நீதித்துறையின் தரம் குறித்து உயர்வாக பேசினர். இந்திய சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்புகள் அடிக்கடி இங்கிலாந்தில் குறிப்பிடப்படும் என்று அவர்கள் தெரிவித்தனர். அதேநேரம் இந்திய கோர்ட்டுகளில் நிலுவையில் இருக்கும் வழக்குகளின் எண்ணிக்கை கவலை அளிக்கிறது. நான் சட்ட மந்திரியாக பதவியேற்றபோது நாடு முழுவதும் உள்ள கோர்ட்டுகளில் 4 கோடிக்கு சற்றே குறைவான எண்ணிக்கையில் வழக்குகள் இருந்தன. ஆனால் இன்று 5 கோடியை நெருங்கி விட்டது. இது நமக்கு எல்லாம் மிகப்பெரும் கவலை அளிக்கும் விஷயம் ஆகும். இந்த நிலைமைக்கு, நீதி வழங்குவதில் குறைபாடு அல்லது அரசின் ஆதரவின்மை காரணம் இல்லை. சில கடுமையான நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.

கூடுதல் நேரம் பணி

இங்கிலாந்தில் ஒவ்வொரு நீதிபதியும் நாள்தோறும் 3 முதல் 4 வழக்குகளுக்கு தீர்ப்பு வழங்குகிறார். ஆனால் இந்திய கோர்ட்டுகளில் ஒவ்வொரு நீதிபதியும் சராசரியாக 40 முதல் 50 வழக்குகளை தினந்தோறும் விசாரிக்கிறார். அவர்கள் கூடுதல் நேரம் பணியாற்றுகிறார்கள் என்பதை இப்போது உணர்கிறேன்.

நீதிபதிகள் பற்றிய தவறான கருத்துகள் சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் வெளியாவதை சில நேரங்களில் பார்க்கிறேன். ஆனால் ஒரு நீதிபதியின் வேலைப்பளுவை நீங்கள் பார்த்தால் கற்பனை செய்ய முடியாதது.

இந்த சமூக ஊடக யுகத்தில் பிரச்சினையின் ஆழத்தை பார்க்காமல், ஒவ்வொருவரும் ஒரு கருத்தை கூறுகின்றனர். நீதிபதிகளின் முடிவுகளில் மக்கள் புகுந்து அவர்களைப்பற்றி தீர்ப்பு வழங்குகிறார்கள்.

வக்கீல்களின் அதிக கட்டணம் காரணமாக ஏழை மக்களுக்கு சிறந்த வக்கீல்கள் கிடைக்க முடியவில்லை. ஆனால் யாருக்கும் நீதி மறுக்கப்படுவதற்கு இது காரணமாக இருக்கக்கூடாது.

இவ்வாறு கிரண் ரெஜிஜூ கூறினார்.


Next Story