காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கொண்டு வந்ததற்கு நேரு பொறுப்பல்ல: பரூக் அப்துல்லா


காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கொண்டு வந்ததற்கு நேரு பொறுப்பல்ல: பரூக் அப்துல்லா
x

காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்று சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பளித்தது.

டெல்லி,

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கடந்த 2019 ஆகஸ்டு 5ம் தேதி மத்திய அரசு ரத்து செய்தது. மேலும், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தை இரண்டாக பிரித்து ஜம்மு-காஷ்மீர், லடாக் என்று 2 யூனியன் பிரதேசங்களாக அறிவித்தது.

இதனிடையே, மத்திய அரசின் நடவடிக்கையை எதிர்த்தும், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ மீண்டும் அமல்படுத்தக்கோரியும் காஷ்மீர் அரசியல்வாதிகள் உள்பட பலர் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர். 4 ஆண்டுகளாக நடந்த இந்த வழக்கில் நேற்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

அதில், ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ மத்திய அரசு ரத்து செய்தது செல்லும் என்று அதிரடியாக தீர்ப்பளித்தது. மேலும், ஜம்மு-காஷ்மீருக்கு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதத்திற்குள் சட்டசபை தேர்தலை நடத்த வேண்டுமென்றும் உத்தரவிட்டது.

அதேவேளை, காஷ்மீர் பிரச்சினைக்கு காரணம் முன்னாள் பிரதமர் ஜவகர்லால் நேரு தான், அவர் தான் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ கொண்டு வந்து தவறு செய்துவிட்டார் என்று மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா நேற்று நாடாளுமன்றத்தில் கூறினார்.

இந்நிலையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370-ஐ ஜவகர்லால் நேரு கொண்டு வரவில்லை என்று ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்-மந்திரியும், தேசிய மாநாட்டு கட்சி தலைவருமான பரூக் அப்துல்லா கருத்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பரூக் அப்துல்லா கூறுகையில், 'நேரு மீது அவர்களுக்கு (பாஜக) ஏன் இவ்வளவு வெறுப்பு உள்ளது என்று எனக்கு தெரியவில்லை. காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 கொண்டு வந்ததற்கு நேரு பொறுப்பல்ல. சட்டம் 370 வந்தபோது சர்தார் வல்லபாய் பட்டேல் தான் இங்கு இருந்தார். மந்திரி சபை கூட்டம் நடைபெற்றபோது நேரு அமெரிக்காவில் இருந்தார். காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டம் 370 கொண்டு வருவது தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டபோது ஷியாமா பிரசாத் முகர்ஜியும் இருந்தார்' என்றார்.


Next Story