கர்நாடகாவில் புதிய குழப்பம்: முதல்-மந்திரி பதவி தர வேண்டும்; பரமேஷ்வர் ஆதரவாளர்கள் கொடி பிடித்து ஆர்ப்பாட்டம்
கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவியை முன்னாள் துணை முதல்-மந்திரியான பரமேஷ்வருக்கு தர வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.
பெங்களூரு,
கர்நாடகாவில், 224 தொகுதிகளை கொண்ட சட்டசபை தேர்தலுக்கான வாக்கு பதிவு சமீபத்தில் நடந்து முடிந்தது. இதில், பெரும்பான்மைக்கான 113 தொகுதிகளை விட கூடுதலாக 135 தொகுதிகளை கைப்பற்றி காங்கிரஸ் கட்சி தனிப்பெரும்பான்மை பெற்றுள்ளது. ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இதற்காக, அக்கட்சியின் சட்டமன்ற குழு கூட்டம் நேற்று முன்தினம் கூடி ஆலோசனை மேற்கொண்டு இறுதி அறிக்கையை கட்சி மேலிடத்திற்கு வழங்கி உள்ளது.
அந்த அறிக்கையை கொண்டு கட்சி தலைமை ஆலோசித்து, முடிவு செய்து கர்நாடக முதல்-மந்திரி யாரென்று அறிவிக்க உள்ளது. இதனை முன்னிட்டு, காங்கிரஸ் கட்சியின் தலைமையை சந்திப்பதற்காக கர்நாடக முன்னாள் முதல்-மந்திரியான சித்தராமையா டெல்லிக்கு நேற்று மதியம் புறப்பட்டு சென்றார். அவர் நேற்றிரவு டெல்லியை சென்றடைந்து உள்ளார்.
இந்த நிலையில், கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமார் தனது பிறந்த நாளை நேற்று உற்சாகமுடன் கொண்டாடினார். இதன்பின் அவர், நான் டெல்லிக்கு போக விரும்பினேன். ஆனால், எனக்கு சில சுகாதார பாதிப்புகள் ஏற்பட்டு உள்ளன என்றார்.
இந்த நிலையில், அவர் இன்று காலை டெல்லிக்கு புறப்பட்டு சென்றார். இன்று மதியம் அவர் டெல்லி வந்தடைந்து உள்ளார். இதன்பின், கர்நாடகாவின் அடுத்த முதல்-மந்திரியை முடிவு செய்யும் கட்சியின் தலைமையுடனான பேச்சுவார்த்தையில் அவர் ஈடுபட உள்ளார். அதற்கு முன்பு தனது சகோதரர் டி.கே. சுரேஷின் அலுவலகத்திற்கு அவர் சென்றார்.
கர்நாடகாவில் தேர்தலுக்கு முன்பு, காங்கிரஸ் கட்சி முதல் மந்திரி வேட்பாளரை அறிவிக்காத நிலையில், டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோர் இடையே முதல் மந்திரி பதவிக்கான போட்டி நிலவியது. முதல்-மந்திரி பதவியை கட்சி வழங்கினால் ஏற்று கொள்வேன் என்று முன்னாள் துணை முதல்-மந்திரி பரமேஸ்வர் கூறினார்.
எனினும், கடந்த 2 தினங்களாக, டி.கே. சிவக்குமார் மற்றும் சித்தராமையா ஆகியோரின் ஆதரவாளர்கள் நகர் முழுவதும் போஸ்டர்களை ஒட்டி தங்களது தலைவருக்கான ஆதரவை வெளிப்படுத்தினர். இதில், டி.கே. சிவக்குமாரின் ஆதரவாளர்கள், அவரது உருவம் கொண்ட கொடியை ஏந்தியபடி, கோஷம் எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால், சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. உடனடியாக போக்குவரத்து போலீசார் சம்பவ பகுதிக்கு சென்று வாகனங்களை அனுப்பி வைத்தனர்.
இந்த நிலையில், கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவியை முன்னாள் துணை முதல்-மந்திரியான பரமேஷ்வருக்கு தர வேண்டும் என வலியுறுத்தி அவரது ஆதரவாளர்கள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், காங்கிரசுக்குள் மும்முனை போட்டி ஏற்பட்டு உள்ளது.
அவர்கள் துமகூரு நகரில் கோஷங்களை எழுப்பியபடியும், கட்சி கொடி மற்றும் பரமேஷ்வர் உருவம் பொறித்த படத்துடன் கூடிய அட்டைகளை ஏந்தியபடியும் சாலை வழியே ஊர்வலம் சென்றனர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. கர்நாடகாவில் முதல்-மந்திரி பதவிக்கு இருவர் இடையே போட்டிக்கான சூழல் காணப்படும்போது, தற்போது அதில் பரமேஷ்வரும் இணைந்து உள்ளார். எனினும், கட்சி மேலிடம் என்ன முடிவு செய்கிறதோ அதற்கேற்பவே, இந்த விசயத்தில் தீர்வு காணப்படும் என கூறப்படுகிறது.