காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க புதிய திட்டம்; வனப்பகுதிக்குள் பலாப்பழங்களை கொட்டுகிறார்கள்


காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க புதிய திட்டம்; வனப்பகுதிக்குள் பலாப்பழங்களை கொட்டுகிறார்கள்
x

குடகு மாவட்டத்தில் வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க வனத்துறையினர் புதிய திட்டம் வகுத்துள்ளனர். அதாவது, வனப்பகுதியில் பலாப்பழங்களை கொட்டி வருகிறார்கள்.

குடகு;

காட்டு யானைகள் அட்டகாசம்

கர்நாடகத்தில் மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் குடகு மாவட்டம் அமைந்துள்ளது. வனப்பகுதிகள் சூழ்ந்த குளிர்ச்சி பிரதேசமாக குடகு விளங்குகிறது. இங்கு பல ஆண்டுகளாக காட்டு யானைகள் அட்டகாசம் இருந்து வருகிறது. வனப்பகுதியில் இருந்து உணவு தேடி காட்டு யானைகள் வெளியேறி கிராமங்கள் மற்றும் விளைநிலங்களில் புகுந்து அட்டகாசம் செய்து வருகின்றன.

இதனால் குடகில் யானை-மனித மோதல் அதிகரித்து வருகின்றன. காட்டு யானை தாக்கி ஏராளமானோர் உயிரிழந்துள்ளனர். இதன்காரணமாக காட்டு யானைகள் வனப்பகுதியில் இருந்து வெளியேறாமல் தடுக்க வனத்துறையினர் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

அதாவது வனப்பகுதியை சுற்றி அகழி அமைப்பது, சோலார் மின்வேலி அமைப்பது, ரெயில் தண்டவாளங்கள கம்பிகளால் தடுப்பு வேலி அமைப்பது போன்ற நடவடிக்கைகள் எடுத்தனர்.

புதிய திட்டம்


ஆனாலும் வனப்பகுதிகளில் இருந்து காட்டு யானைகள் வெளியேறுவதை தடுக்க முடியவில்லை. கிராமங்களில் நுழையும் காட்டு யானைகளை வனத்துறையினர் விரட்டியடித்தாலும் அவை மீண்டும், மீண்டும் வெளியேறி தொடர்ந்து அட்டகாசம் செய்து வருகின்றன. இந்த நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் காட்டு யானைகளை தடுக்க வனத்துறையினர் தற்போது புதிய திட்டத்தை வகுத்துள்ளனர்.

அதாவது, வனப்பகுதியில் இருந்து காட்டு யானைகள் உணவு தேடி தான் வெளியேறுகின்றன. அவை காபி தோட்டங்களில் உள்ள பலாமரங்களில் காய்த்துள்ள பலாப்பழங்களை சுவைத்து, மரங்களை முறித்துபோட்டும், காபி செடிகளை மிதித்தும் நாசப்படுத்தி செல்கின்றன.


இதனால், காபி தோட்டங்களில் விளையும் பலாப்பழங்களை பறித்து வனப்பகுதியில் யானைகள் அதிக நடமாட்டம் உள்ள பகுதியில் கொட்டினால், அவை பலாப்பழத்தை சாப்பிட்டு விட்டு வனப்பகுதியை விட்டு வெளியே வராமல் இருக்கும் என வனத்துறையினர் கருதினர்.

வெளியேறுவது குறைந்துள்ளது

இதையடுத்து வனத்துறையினர், காபி தோட்டங்களில் உள்ள பலாமரங்களில் விளையும் பலாப்பழங்களை டிராக்டரில் ஏற்றி வனப்பகுதியில் கொண்டு கொட்டி வருகிறார்கள். மால்தாரே, துபாரே, மீன்கொள்ளி, ஆனேகாடு ஆகிய பகுதிகளில் முதற்கட்டமாக வனத்துறையினர் பலாப்பழங்களை கொட்டி வருகிறார்கள்.

காட்டு யானைகள் அங்கு கொட்டப்பட்டுள்ள பலாப்பழங்களை தின்றுவிட்டு வனப்பகுதிக்குள் செல்கின்றன. மேலும் அந்தப்பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தவும் வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.

தற்போது மால்தாரே, துபாரே, மீன்கொள்ளி, ஆனேகாடு பகுதிகளில் பலாப்பழங்களை கொட்டி வருவதால் அந்தப்பகுதிகளில் காட்டு யானைகள் வெளியேறுவது குறைந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த முயற்சி வெற்றி பெற்றால் காட்டு யானைகள் அட்டகாசம் அதிகம் உள்ள பகுதிகளில் இதனை அமல்படுத்த வனத்துறையினர் முடிவு செய்துள்ளனர்.


Next Story