புத்தாண்டு தரிசனம்: சபரிமலையில் அலைமோதிய பக்தர்கள் கூட்டம்


தினத்தந்தி 1 Jan 2024 10:30 PM GMT (Updated: 2 Jan 2024 1:46 AM GMT)

பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர்.

சபரிமலை,

மகரவிளக்கு பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மாதம் 30-ந் தேதி திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வருகிறார்கள். இந்தநிலையில் புத்தாண்டு தரிசனத்துக்காக நேற்று நள்ளிரவில் இருந்தே பக்தர்கள் குவிந்தனர்.

தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி அதிகாலை 3 மணிக்கு கோவில் நடையை திறந்து வைத்தார். பின்னர் பக்தர்கள் 18-ம்படி வழியாக சென்று சன்னிதானத்தில் அய்யப்பனை பயபக்தியுடன் தரிசனம் செய்தனர்.

கூட்டம் அலைமோதியதால் பம்பை முதல் சன்னிதானம் வரை 5 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். சபரிமலையில் தரிசனம் செய்வதற்கான ஆன்லைன் முன்பதிவு வருகிற 15-ந் தேதி வரை முடிவடைந்து விட்டது. இதனால் நேற்று ஆன்லைனில் முன்பதிவு செய்த 80 ஆயிரம் பக்தர்கள் மற்றும் உடனடி பதிவு செய்த பக்தர்களும் திரண்டு வந்ததால் 95 ஆயிரம் பேர் வரை தரிசனம் செய்திருக்கலாம் என திருவிதாங்கூர் தேவஸ்தானம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story