புதிதாக மணமுடித்த ஜோடி... கணவரை இழந்த துக்கத்தில் மனைவி அதிர்ச்சி முடிவு
கணவர் உயிரிழந்த 24 மணிநேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
புதுடெல்லி,
டெல்லியின் காசியாபாத் நகரில் வசித்து வந்த தம்பதி அபிஷேக் ஆலுவாலி (வயது 25). இவருடைய மனைவி அஞ்சலி. கடந்த நவம்பர் 30-ந்தேதி இந்த ஜோடிக்கு திருமணம் நடந்தது.
இந்த நிலையில், இருவரும் டெல்லியில் உள்ள விலங்கியல் பூங்காவுக்கு செல்வது என நேற்று முடிவு செய்தனர். அவர்கள் சென்றபோது, அபிஷேக்குக்கு லேசாக நெஞ்சு வலி ஏற்பட்டது.
இதனால், பயந்து போன அஞ்சலி நண்பர்களை உதவிக்கு அழைத்து உள்ளார். இதனை தொடர்ந்து அபிஷேக்கை, குரு தேஜ் பகதூர் மருத்துவமனைக்கு உடனடியாக கொண்டு சென்றனர். இதன்பின் சப்தர்ஜங் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.
ஆனால், அதில் பலனின்றி அபிஷேக் உயிரிழந்து விட்டார் என டாக்டர்கள் தெரிவித்தனர். அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு இருக்க கூடும் என கூறப்படுகிறது. அவரது உடல், காசியாபாத்தின் வைஷாலி நகரில் உள்ள ஆல்கான் குடியிருப்பு பகுதியில் உள்ள வீட்டுக்கு இரவு 9 மணியளவில் கொண்டு செல்லப்பட்டது.
கணவர் உயிரிழந்த அதிர்ச்சியில் இருந்து அஞ்சலி மீளாமல் அழுதபடியே காணப்பட்டார். இந்நிலையில், அவர் திடீரென எழுந்து 7-வது மாடியின் முகப்பு பகுதிக்கு சென்று கீழே குதித்து விட்டார்.
இதில் பலத்த காயமடைந்த அவரை உறவினர்கள் மீட்டு மேக்ஸ் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று காலை அஞ்சலி உயிரிழந்து விட்டார். கணவர் உயிரிழந்த 24 மணிநேரத்திற்குள் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில ஆண்டுகளாக இளம் வயதில் பலர் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழக்கும் சம்பவம் நாட்டில் அதிகரித்து வருகிறது. கர்பா நடனத்தின்போது, திருமண ஊர்வலம் மற்றும் ஜிம் உள்பட பல்வேறு இடங்களில் இளைஞர்கள் உயிரிழக்கும் சம்பவங்கள் அதிகரித்து காணப்படுகின்றன.