லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பாங்காங் டிசோ ஏரி பகுதியில் 2-வது பாலம் அமைக்கும் சீனா...!
லடாக் எல்லையில் சர்ச்சைக்குரிய பாங்காங் டிசோ ஏரி பகுதியில் சீனா 2-வது பாலம் அமைத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,
இந்தியா-சீன படைகள் இடையே லடாக் எல்லையில் கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் கடந்த 2020-ம் ஆண்டு ஜுன் 15-ம் தேதி நள்ளிரவு மோதல் ஏற்பட்டது. இந்த மோதலில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். மோதலில் தங்கள் தரப்பில் 4 வீரர்கள் உயிரிழந்ததாக சீனா தெரிவித்துள்ளது.
இந்த மோதலை தொடர்ந்து எல்லையில் இருநாட்டு படைகளும் குவிக்கப்பட்டுள்ளன. இரு நாடுகளும் தலா 50 ஆயிரம் வீரர்களை எல்லையில் குவித்து வைத்துள்ளது.
அதேவேளை எல்லையில் இருந்து படைகளை திரும்பப்பெறுவது தொடர்பாக இருநாடுகளும் இதுவரை 15 கட்ட ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தை நடத்தியுள்ளன. ஆனால், அந்த பேச்சுவார்த்தை அனைத்தும் தோல்வியிலேயே முடிந்துள்ளது.
இதற்கிடையில், 1962 ஆம் ஆண்டு நடந்த போரில் இந்தியாவின் கிழக்கு லடாக்கின் பாங்காங் டிசோ ஏரி பகுதியில் பல ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் நிலப்பரப்பை சீனா கைப்பற்றியது. இந்த பகுதியை சீனாவால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியாக இந்தியா கருதுகிறது.
கல்வான் பள்ளத்தாக்கு மோதலுக்கு பின் பாங்காங் டிசோ ஏரி உள்பட இந்தியாவின் எல்லையோர பகுதியில் சீனா உள்கட்டமைப்பு வசதிகளை அதிகரித்து வருகிறது. தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சர்ச்சைக்குரிய பாங்காங் டிசோ ஏரி பகுதியில் சீனா கடந்த சில மாதங்களுக்கு முன் ஒரு பாலம் ஒன்றை அமைத்தது. இந்த பாலம் மூலம் போர் தளவாடங்கள், வீரர்களை சீனா எளிதில் எல்லைப்பகுதிக்கு கொண்டு வர முடியும்.
இந்நிலையில், சர்ச்சைக்குரிய பாங்காங் டிசோ ஏரியில் தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சீனா 2-வது பாலம் அமைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. முதல் பாலத்திற்கு மிக அருகே 2-வது பாலம் அமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பாங்காங் டிசோ ஏரியில் சீனா 2-வது பாலம் அமைத்துள்ளது இருநாட்டிற்கு இடையே நிலவி வரும் எல்லைப்பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதேவேளை, இந்த விவகாரம் குறித்து தெரிவித்துள்ள இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம், ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியான பாங்காங் டிசோ ஏரியில் சீனா 2-வது பாலம் அமைப்பது குறித்து தீவிரமாக கண்காணித்து வருகிறோம்' என தெரிவித்துள்ளது.