போதைப்பொருள் வழக்கில் கைதாகி 5 ஆண்டுகளாக தலைமறைவு; நைஜீரியா வாலிபரின் ஜாமீன் ரத்து - கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவு
போதைப்பொருள் வழக்கில் கைதாகி 5 ஆண்டுகளாக தலைமறைவான நைஜீரியா வாலிபரின் ஜாமீன் ரத்து செய்து கர்நாடக ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
பெங்களூரு:
பெங்களூருவில் போதைப்பொருட்கள் விற்பனை செய்ததாக கடந்த 2017-ம் ஆண்டு மார்ச் மாதம் 27-ந் தேதி நைஜீரியாவை சேர்ந்த யாகூப் உஸ்மான் அகா என்பவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கில் பெங்களூரு சிட்டிசிவில் மற்றும் செசன்சு கோர்ட்டு அதே ஆண்டு ஏப்ரல் 15-ந் தேதி யாகூப் உஸ்மானுக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டு இருந்தது. அதன்பிறகு, கோர்ட்டில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்கு அவர் ஆஜராகவில்லை. கடந்த 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தொடர்ந்து தலைமறைவாக இருந்து வந்தார்.
இந்த நிலையில், ஜாமீனில் வெளியே வந்து தலைமறைவாக உள்ள யாகூப் உஸ்மானின் ஜாமீன ரத்து செய்ய கோரி, பெங்களூரு மத்திய மண்டல போலீசார் சார்பில், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனு மீதான விசாரணை ஐகோர்ட்டு நீதிபதி நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது போதைப்பொருள் விற்றதாக கைதான யாகூப் உஸ்மானின் ஜாமீனை ரத்து செய்து நீதிபதி அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவர் கூறுகையில், வழக்கமாக ஒரு வழக்கில் ஜாமீன் வழங்கிய பின்பு ரத்து செய்ய இயலாது. ஆனால் நைஜீரியா நபர் அனைத்து விதிமுறைகளை மீறி இருக்கிறார். 5 ஆண்டுகளாக கோர்ட்டில் ஆஜராகாமல் தலைமறைவாக உள்ளார். கோர்ட்டு விசாரணையும் தாமதமாகிறது. எனவே அவருக்கு வழங்கப்பட்டு இருந்த ஜாமீன் ரத்து செய்யப்பட்டுள்ளது, என்றார்.