மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் மீண்டும் போட்டி


மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து நிர்மலா சீதாராமன் மீண்டும் போட்டி
x

மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மீண்டும் போட்டியிடுகிறார். மேலும் 4-வது இடத்திற்கும் பா.ஜனதா வேட்பாளரை நிறுத்த திட்டமிட்டு இருக்கிறது. நடிகர் ஜக்கேசுக்கும் பா.ஜனதா வாய்ப்பு அளித்திருக்கிறது.

பெங்களூரு:

வாக்குகள் இல்லை

மாநிலங்களவையில் 57 எம்.பி.க்களின் பதவிக்காலம் விரைவில் முடிவடைகிறது. இதனால் மாநிலங்களவையில் காலியாகும் இடங்களுக்கு வருகிற 10-ந் தேதி தேர்தல் நடைபெறும் என்று இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. அதன்படி கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவையில் காலியாகும் 4 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 24-ந் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மனு தாக்கல் செய்ய நாளை (செவ்வாய்க் கிழமை) கடைசி நாள் ஆகும்.

கர்நாடகத்தில் சட்டசபையில் உள்ள பலத்தின் அடிப்படையில் ஆளும் பா.ஜனதாவுக்கு 2 இடங்களும், காங்கிரசுக்கு ஒரு இடமும் கிடைப்பது உறுதியாகி உள்ளது. 4-வது இடத்தில் வெற்றி பெற எந்த கட்சியிடமும் போதுமான வாக்குகள் இல்லை. இதனால் அந்த இடத்திற்கு இழுபறி நீடித்து வருகிறது.

3-வது வேட்பாளர்

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் 3-வது வேட்பாளரை நிறுத்த முடிவு செய்யப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்களின் ஆதரவை பெற்று 3-வது வேட்பாளரை நிறுத்த பா.ஜனதா திட்டமிட்டு வருகிறது. தற்போது பா.ஜனதா கட்சியில் சபாநாயகரையும் சேர்த்து 120 எம்.எல்.ஏ.க்களின் பலம் உள்ளது. இதுதவிர பகுஜன் சமாஜ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட என்.மகேஷ் மற்றும் சுயேச்சை எம்.எல்.ஏ.வான நாகேஷ் ஆகிய 2 பேரின் ஆதரவும் பா.ஜனதாவுக்கு உள்ளது.

மாநிலங்களவையில் ஒரு வேட்பாளர் வெற்றிபெற 45 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுகள் தேவையாகும். தற்போது பா.ஜனதா சார்பில் 2 வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டால், 90 எம்.எல்.ஏ.க்கள் போக மீதி 32 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். பா.ஜனதா சார்பில் 3-வது வேட்பாளர் நிறுத்தப்பட்டால், அவர் வெற்றிபெற 13 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு தேவைப்படுகிறது. அதனால் ஜனதா தளம்(எஸ்) கட்சி எம்.எல்.ஏ.க்கள் 13 பேரின் ஆதரவை பெற பா.ஜனதா திட்டமிட்டு இருப்பதாக தெரிகிறது.

நிர்மலா சீதாராமன் போட்டி

இந்த நிலையில் பா.ஜனதா சார்பில் 2 இடங்களுக்கு போட்டியிடும் வேட்பாளர்களை அக்கட்சி மேலிடம் நேற்று அதிகாரபூர்வமாக அறிவித்தது. அக்கட்சி சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நடிகர் ஜக்கேஷ் ஆகியோர் போட்டியிடுவார்கள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்மலா சீதாராமன் 2-வது முறையாக கர்நாடகத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்து எடுக்கப்படுகிறார்.

நடிகர் ஜக்கேஷ் முதல் முறையாக எம்.பி. ஆக உள்ளார். அவர் இதற்கு முன்பு கர்நாடக மேல்-சபை உறுப்பினராக பணியாற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது. நிர்மலா சீதாராமன் இந்த முறை கர்நாடகத்தில் இருந்து போட்டியிட மாட்டார் என்று கூறப்பட்டது. ஆனால் அந்த தகவல் தற்போது பொய்யாகியுள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

முடிவு எடுப்போம்

மாநிலங்களவை தேர்தலில் கர்நாடகத்தில் இருந்து பா.ஜனதா சார்பில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் போட்டியிடுகிறார். இது கட்சி மேலிடம் எடுத்த முடிவு. அதேபோல் நடிகர் ஜக்கேசும் போட்டியிடுகிறார். 4-வது இடத்திற்கு எந்த கட்சியிடமும் போதுமான வாக்குகள் இல்லை. அதனால் ஏதாவது ஒரு கட்சியுடன் கூட்டணி சேர்ந்தால் மட்டுமே வெற்றி பெற முடியும்.

ஜனதா தளம்(எஸ்) கட்சி வேட்பாளரை நிறுத்துவதாக கூறியுள்ளது. நாங்களும் அதுபற்றி ஆலோசனை நடத்தியுள்ளோம். இந்த விஷயத்தில் கட்சி மேலிடம் என்ன சொல்கிறதோ? அதன்படி முடிவு எடுப்போம்.

இவ்வாறு பசவராஜ் பொம்மை கூறினார்.


Next Story