ம.பி: ஆம்புலன்ஸ் கிடைக்காததால், 4 வயது மகளின் உடலை தானே தூக்கிச்சென்ற தந்தையின் சோகம் !


ம.பி: ஆம்புலன்ஸ் கிடைக்காததால், 4 வயது மகளின் உடலை தானே தூக்கிச்சென்ற தந்தையின் சோகம்  !
x

image screengrap for video tweeted by @Anurag_Dwary

மத்தியப் பிரதேசத்தில் ஆம்புலன்ஸ் கிடைக்காததால், 4 வயது மகளின் உடலை தந்தையே தூக்கிச்சென்ற சோகம் நிகழ்ந்துள்ளது.

போபால்,

மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தை சேர்ந்த பெற்றோர், தங்கள் நான்கு வயது மகளுக்கு திடீரென உடல்நிலை சரியில்லாமல் போனதால், சிகிச்சைக்காக திங்களன்று முதலில் பக்ஸ்வாஹா சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.

பின்னர் சிறுமியில் உடல்நிலை மோசமடைந்ததால், டாமோவில் உள்ள மாவட்ட மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், அங்கு சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பின்னர் தன் மகளின் உடலை தந்தையே தோளில் சுமந்தவாறு தூக்கிச்சென்ற சோகம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து சிறுமியின் தாத்தா மன்சுக் அஹிர்வார் கூறுகையில், சிறுமியின் உடலை வீட்டிற்கு எடுத்துச் செல்ல மருத்துவமனை ஊழியர்களிடம் ஆம்புலன்ஸ் கேட்டதாகவும், ஆனால் அவர்களிடமிருந்து சரியான பதில் கிடைக்கவில்லை என்றும் குற்றம் சாட்டினார்.

மேலும், தனியார் வாகனத்தை ஏற்பாடு செய்ய தங்களிடம் போதிய பணம் இல்லாததால், நாங்கள் அவளது உடலை போர்வையில் போர்த்தி, பக்ஸ்வாஹாவுக்கு பஸ்சில் ஏறினோம்," என்று அவர் கூறினார்.

பின்னர் பக்ஸ்வாஹாவை அடைந்த பிறகு, சிறுமியின் தந்தை லக்ஷ்மன் அஹிர்வார், தன் மகளின் உடலை பவுடி கிராமத்திற்கு எடுத்துச் செல்ல ஒரு வாகனத்தை வழங்குமாறு நகர் பஞ்சாயத்திடம் கேட்டுள்ளார். ஆனால் அவர்கள் மறுத்துவிட்டனர் என்று அவர்கள் கூறியுள்ளனர்.

ஆனால் டாமோ மருத்துவமனையை சேர்ந்த அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் மம்தா திமோரி இதனை மறுத்துள்ளார். மேலும், அவர் கூறுகையில்,. "யாரும் எங்களிடம் ஆம்புலன்ஸ் கேட்டு வரவில்லை. எங்களிடம் வாகனங்கள் உள்ளன. எங்களுக்கு தெரியவந்தால், செஞ்சிலுவைச் சங்கம் அல்லது வேறு எந்த தன்னார்வ தொண்டு நிறுவனத்திடமிருந்தும் நாங்கள் வாகனம் ஏற்பாடு செய்திருப்போம் என்று அவர் கூறினார்.


Next Story