'முதல்-மந்திரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம்' - ரன்தீப் சுர்ஜேவாலா அறிவுறுத்தல்


முதல்-மந்திரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம் - ரன்தீப் சுர்ஜேவாலா அறிவுறுத்தல்
x

பா.ஜ.க. பல மாநிலங்களில் முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்கு 10 நாட்கள் வரை எடுத்துக் கொண்டதாக ரன்தீப் சுர்ஜேவாலா சுட்டிக்காட்டியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடகாவில் காங்கிரஸ் கட்சி 135 உறுப்பினர்களுடன் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க இருக்கிறது. எனினும், முதல்-மந்திரி பதவியை யார் கைப்பற்றுவது என்பதில் முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா, கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவக்குமாருக்கும் இடையே கடும் போட்டி காணப்படுகிறது.

இந்த நிலையில், இருவரும் தனித்தனியே ராகுல் காந்தியை இன்று சந்தித்தனர். எனினும், முதல்-மந்திரி யாரென்று அறிவிப்பதில் மர்மம் நீடித்து வருகிறது. இது குறித்து, பா.ஜ.க.வின் முன்னாள் மாநில உள்துறை மந்திரியான அரக ஞானேந்திரா கூறும்போது, "காங்கிரஸ் கட்சியில் முதல்-மந்திரி பதவிக்கான சண்டை அடுத்த 5 ஆண்டுகளுக்கு தொடரும். மக்களுக்கு அடுத்த 5 ஆண்டுகளில் அவர்கள் எதுவும் செய்யப் போவதில்லை. டெல்லிக்கு சென்ற பின்னரும் கூட அவர்களது சண்டை தொடரும்" என்று கூறியுள்ளார்.

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் பொதுச்செயலாளர் (கர்நாடகா பொறுப்பாளர்) ரன்தீப் சுர்ஜேவாலா செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

"பா.ஜ.க.வின் போலிச் செய்தி தொழிற்சாலைக்கு ஊடகங்களின் ஒரு பகுதி பலியாகி விட்டது. பா.ஜ.க. பல மாநிலங்களில் முதல்-மந்திரிகளை தேர்வு செய்வதற்காக 7 முதல் 10 நாட்கள் எடுத்துக் கொண்டபோது, பிரதமரிடம் இதேபோல் கேள்வி எழுப்பினார்களா? ஆனால் அதே நபர்கள், ஒரு குறிப்பிட்ட ஊடகங்கள், உண்மையான ஜனநாயக மரபுகளின்படி செயல்படும் மல்லிகார்ஜுன் கார்கேவின் செயல்முறைக்கு ஆட்சேபனைகளை தெரிவித்துள்ளன.

கர்நாடக சகோதர சகோதரிகளால் நிராகரிக்கப்பட்ட பா.ஜ.க.வின் விரக்தி எங்களுக்கு புரிகிறது. முதல்-மந்திரி தேர்வு விவகாரம் தொடர்பாக இங்கிருந்து காங்கிரஸ் தலைவர்கள் யாரும் அறிக்கை வெளியிட வேண்டாம். யாராவது கருத்து தெரிவித்தால் ஒழுக்கமின்மையாகக் கருதப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும்."

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Next Story