மனைவியிடமிருந்து விவாகரத்து பெற மனைவிக்கு எச்.ஐ.வி என கோர்ட்டில் நாடகமாடிய கணவரின் மனு தள்ளுபடி!


மனைவியிடமிருந்து விவாகரத்து பெற மனைவிக்கு எச்.ஐ.வி என கோர்ட்டில் நாடகமாடிய கணவரின் மனு தள்ளுபடி!
x
தினத்தந்தி 24 Nov 2022 1:21 PM GMT (Updated: 24 Nov 2022 1:24 PM GMT)

எச்.ஐ.வி பாதித்த மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய நபருக்கு விவாகரத்து வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

மும்பை,

எச்.ஐ.வி பாதித்த மனைவியிடமிருந்து விவாகரத்து கோரிய புனேவைச் சேர்ந்த 44 வயது நபருக்கு விவாகரத்து வழங்க மும்பை ஐகோர்ட்டு மறுத்துவிட்டது.

அந்த நபர் தனது மனைவிக்கு எச்.ஐ.வி பாசிட்டிவ் என்று பொய் கூறி விவாகரத்து பெற முயற்சித்தது விசாரணையில் தெரியவந்தது.

விவாகரத்து கோரிய நபருக்கும் அவரது மனைவிக்கும் மார்ச் 2003இல் திருமணம் நடைபெற்றது. அதன்பின்னர் அந்த நபர் தனது மனைவி மீது குற்றம்சுமத்தி வந்தார்.

தனது மனைவி விசித்திரமானவர், பிடிவாதமானவர் மற்றும் குறுகிய மனப்பான்மை கொண்டவர் என்றும், தன்னையும் தனது குடும்ப உறுப்பினர்களையும் அவர் சரியாக நடத்தவில்லை என்றும் கூறினார். தனது மனைவி காசநோய் மற்றும் வயிற்றுப்போக்கால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் கோர்ட்டில் கூறினார். 2005 ஆம் ஆண்டில், அவரது மனைவிக்கு எச்.ஐ.வி பரிசோதனையில் எச்.ஐ.வி பாசிட்டிவ் என்று முடிவு வந்தது. ஆகவே தான் மிகுந்த மனஉளைச்சல் அடைந்திருப்பதாகல் அந்த நபர் விவாகரத்து கேட்டார்.

மறுபுறம், அவரது மனைவி தனக்கு எச்.ஐ.வி இல்லை என்று கூறினார். எச்.ஐ.வி பரிசோதனையில் எச்.ஐ.வி நெகட்டிவ் என்று முடிவு வந்தது. இதை மறைத்து, தனது கணவர் அவரது கணவர் குடும்ப உறுப்பினர்களிடையே வதந்திகளைப் பரப்பி, தனக்கு மன வேதனையை ஏற்படுத்தினார் என்று கோர்ட்டில் தெரிவித்தார்.

முன்னதாக புனேவில் உள்ள குடும்பநல நீதிமன்றத்தில் விவாகரத்து கோரி மனு தாக்கல் செய்தார். ஆனால் அவரது மனுவை நீதிமன்றம் நிராகரித்தது. இதையடுத்து, குடும்பநல நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவர் ஐகோர்ட்டில் கடந்த 2011ம் ஆண்டு உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த நிலையில், இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிதின் ஜம்தார் மற்றும் ஷர்மிளா தேஷ்முக் ஆகியோர் அடங்கிய டிவிஷன் பெஞ்ச், நவம்பர் 16 தேதியிட்ட உத்தரவில் அந்த நபரின் மனுவை தள்ளுபடி செய்தது.

தனது மனைவிக்கு எச்.ஐ.வி பாதிப்பு இருப்பதாக மருத்துவ அறிக்கை தாக்கல் செய்ய கணவர் தவறிவிட்டதாக கோர்ட்டு உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. மனைவியின் எச்ஐவி பரிசோதனையில் அவருக்கு மனவேதனையை ஏற்படுத்தியதாகவோ அல்லது மனைவி அவரை கொடுமைப்படுத்தியதாகவோ மனுதாரர்(கணவன்) அளித்த சாட்சியங்கள் ஆதாரம் இல்லை என கோர்ட்டு தெரிவித்துள்ளது.

மருத்துவ அறிக்கை எச்.ஐ.வி இல்லை என்று இருந்தபோதிலும், மனுதாரர் மனைவியுடன் வாழ மறுத்து, அவர் எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்டதாக சமூகத்தில் அவதூறு பரப்பினார்.ஆகவே விவாகரத்து வழங்குவதற்கான அவரது வாதம் முற்றிலும் நிராகரிக்கப்படுகிறது என கோர்ட்டு தெரிவித்துள்ளது.


Next Story