பாஜக எவ்வளவு முயற்சித்தாலும் 'பாரத் ஜோடோ' யாத்திரையை நிறுத்தமாட்டோம் - காங்கிரஸ்


பாஜக எவ்வளவு முயற்சித்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை நிறுத்தமாட்டோம் - காங்கிரஸ்
x

பாஜக எவ்வளவு முயற்சித்தாலும் ‘பாரத் ஜோடோ’ யாத்திரையை நிறுத்தமாட்டோம் என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல்காந்தி பாரத் ஜோடோ யாத்திரை என்ற பெயரில் இந்திய ஒற்றுமை யாத்திரை மேற்கொண்டு வருகிறார். செப்டம்பர் 7-ம் தேதி தமிழ்நாட்டின் கன்னியாகுமரியில் தொடங்கிய இந்த யாத்திரை கேரளா, கர்நாடகா, மத்தியபிரதேசம், ராஜஸ்தானை கடந்து நடைபெற்று வருகிறது.

கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை 3 ஆயிரத்து 500 கிலோமீட்டர்கள் பாத யாத்திரையாக செல்லும் இந்த பயணம் 150 நாட்கள் நடைபெறுகிறது.

பல்வேறு நகரங்கள் வழியாக ராகுல்காந்தி தலைமையில் இந்த பாதயாத்திரை நடைபெற்று வருகிறது. இந்த பாதயாத்திரைக்கு நாளுக்கு நாள் வரவேற்பு அதிகரித்து வருகிறது.

இதனிடையே, ராகுல்காந்தியின் பாரத் ஜோடோ யாத்திரை இன்று 108-வது நாளை எட்டியுள்ளது. கடந்த சில நாட்களாக அரியானாவில் யாத்திரை நடைபெற்ற நிலையில் யாத்திரை இன்று டெல்லிக்குள் நுழைய உள்ளது.

அதேவேளை, சீனாவில் அதிகரித்து வரும் சூழ்நிலையில் இந்தியாவில் கொரோனா அதிகரிக்கலாம் நாட்டு நலனை கருத்தில் கொண்டு தங்கள் யாத்திரையில் கொரோனா விதிகளை பின்பற்ற வேண்டும் இல்லாவிட்டால் யாத்திரையை நிறுத்துபடி ராகுல்காந்திக்கு மத்திய சுகாதாரத்துறை மந்திரி மன்சுக் மாண்டவியா கடிதம் எழுதியுள்ளார்.

இந்நிலையில், பாஜக எவ்வளவு முயற்சித்தாலும் பாரத் ஜோடோ யாத்திரையை தடுக்க முடியாது என்று காங்கிரஸ் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர் வேணுகோபால் கூறுகையில், இந்த யாத்திரை மூலம் அவர்களின் (பாஜக) பிரசாரங்கள் அழிக்கப்பட்டுள்ளன. தற்போது இந்த யாத்திரையை தடுக்க புதிய வழிகளை கண்டுபிடிக்கின்றனர். கொரோனா காரணமாக யாத்திரையை நிறுத்தும்படி மத்திய சுகாதார மந்திரி மன்சுக் மாண்டவியா ராகுல்காந்திக்கு கடிதம் எழுத்தியுள்ளார்.

இது பொதுவான அறிக்கை என்றால், பிரதமர் மோடி பேரணியில் பங்கேற்கிறார். மந்திரிகள் அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர். பாஜக முதல்-மந்திரிகள் நிகழ்ச்சிகளில் பங்கேற்கின்றனர், ராஜஸ்தான் பாஜக யாத்திரை மேற்கொள்கிறது. ஆனால், ராகுல்காந்தி மற்றும் அசோக் கெலாட்டிற்கு (ராஜஸ்தான் காங். முதல்-மந்திரி) மட்டும் கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

கொரோனா கட்டுப்பாடுகள் பாரத் ஜோடோ யாத்திரை, ராகுல்காந்தி, அசோக் கெலாட்டிற்கு மட்டும் தானா... சர்வதேச விமானம் ஒன்று கூட ரத்து செய்யப்படவில்லை. சீனாவில் இருந்து தினம் தினம் மக்கள் இங்கு வருகின்றனர். இங்கிருந்து தினம் தினம் சீனாவுக்கு பயணம் செய்கின்றனர். அதில் எந்த பிரச்சினையும் இல்லை, ஆனால், பாரத் ஜோடோ யாத்திரையை பாஜக நிறுத்த நினைக்கிறது' என்றார்.


Next Story