எத்தனை பிரசாரம், பேரணியை பிரதமர் நடத்தினாலும் மக்களுக்கு அதில் ஆர்வமில்லை; ஜெய்ராம் ரமேஷ் பேட்டி


எத்தனை பிரசாரம், பேரணியை பிரதமர் நடத்தினாலும் மக்களுக்கு அதில் ஆர்வமில்லை; ஜெய்ராம் ரமேஷ் பேட்டி
x

பிரதமர் மோடியையும், அவரது பேரணியையும் பார்த்து மக்கள் களைப்படைந்து விட்டனர் என காங்கிரஸ் மூத்த தலைவர் ஜெய்ராம் ரமேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.

பெங்களூரு,

கர்நாடக சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை முடிவில், தனிப்பெரும்பான்மையுடன் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்று உள்ளது. ஆட்சியமைக்கும் அனைத்து வேலைகளிலும் ஈடுபட்டு வருகிறது. இந்த தேர்தல் வெற்றிக்கு பின்னர் காங்கிரஸ் கட்சியின் தகவல் தொடர்புக்கான பொது செயலாளர் பொறுப்பு வகிக்கும், மூத்த தலைவரான நாடாளுமன்ற எம்.பி. ஜெய்ராம் ரமேஷ் பெங்களூருவில் செய்தியாளர்களை இன்று சந்தித்து பேசினார்.

அவர் அளித்த பேட்டியில், பிரதமர் மற்றும் அவரது தேர்தல் பிரசாரம் என பார்த்து, பார்த்து மக்கள் களைப்படைந்து விட்டனர். அவர் எத்தனை பேரணி நடத்தினாலும் சரி. அதில் பொதுமக்களுக்கு ஆர்வமில்லை என கூறியுள்ளார்.

பஜ்ரங் தளம் என்பது வேறு. பஜ்ரங் பலி என்பது வேறு. பஜ்ரங் தளம் வெறுப்பு மற்றும் வன்முறைக்கான அரசியலை பரப்புவதில் நம்பிக்கை கொண்டிருக்கிறது என்று அவர் கூறியுள்ளார்.

காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில், சட்டமீறல், மதவெறுப்புணர்வை பரப்பும், மதபாகுபாடு, சமூக வன்முறையை பரப்புவது ஆகியவற்றில் ஈடுபடும் எந்தவோர் அமைப்பும் சட்டம் மற்றும் அரசியல் சாசனத்தின்படி எதிர்கொள்ளப்படும் என தெரிவித்து இருந்தது என பேசியுள்ளார்.

கர்நாடக சட்டசபை தேர்தலை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி கடந்த 2-ந்தேதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டு இருந்தது. அக்கட்சி தலைவர் மல்லிகார்ஜூன கார்கே வெளியிட்ட அந்த அறிக்கையில், சட்டம் மற்றும் அரசியல் சாசனம் புனிதம் வாய்ந்தது என நாங்கள் நம்புகிறோம். அதனை தனி நபர்கள் அல்லது பஜ்ரங் தளம், பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா மற்றும் பிற அமைப்புகள், பெரும்பான்மையினர் அல்லது சிறுபான்மையினர் இடையே பகைமையையோ அல்லது வெறுப்புணர்வையோ ஊக்குவித்து மீறுதல் கூடாது.

சாதி மற்றும் மத ரீதியாக சமூகத்திற்கு எதிராக வெறுப்புணர்வை பரப்ப கூடிய தனி நபர்கள் மற்றும் அமைப்புகள் மீது காங்கிரஸ் கட்சியானது உறுதியான மற்றும் தீர்க்கம் வாய்ந்த முடிவை எடுக்கும் என்று அந்த அறிக்கை தெரித்தது.

அதுபோன்ற எந்தவொரு அமைப்பின் மீதும் சட்டத்தின்படி, தடை விதிப்பது உள்ளிட்ட முடிவுகளை நாங்கள் எடுப்போம் என்றும் தெரிவித்து இருந்தது.

இதனை தொடர்ந்து, அடுத்த நாள் தெலுங்கானாவின் ஐதராபாத் நகரில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகம் முன்பு பஜ்ரங் தள அமைப்பை சேர்ந்த தொண்டர்கள் ஒன்று திரண்டு, போலீசாரின் பாதுகாப்பை மீறி கட்சி அலுவலகத்திற்கு உள்ளே நுழைய முயற்சித்தனர்.

இதனால், பஜ்ரங் தள அமைப்பினருக்கும், போலீசாருக்கும் இடையே சிறிது நேரம் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதன்பின் அவர்களை தடுத்து, கைது செய்து போலீஸ் வேனில் ஏற்றினர். இதனால், அந்த பகுதியில் பரபரப்பு காணப்பட்டது.

இந்த சம்பவத்திற்கு அடுத்த நாள், மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் நகரில் காங்கிரஸ் கட்சி அலுவலகம் ஒன்றிற்குள் பஜ்ரங் தள தொண்டர்கள் கும்பலாக புகுந்து, அதனை சூறையாடினர். இதுபற்றிய வீடியோ ஒன்றும் வைரலானது.


Next Story