அரசியலில் என்னை யாரும் ஒழிக்க முடியாது; எடியூரப்பா பரபரப்பு பேட்டி


அரசியலில் என்னை யாரும் ஒழிக்க முடியாது; எடியூரப்பா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 16 Dec 2022 12:15 AM IST (Updated: 16 Dec 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் அரசியலில் என்னை யாரும் ஒழிக்க முடியாது என்று எடியூரப்பா கூறினார்.

பெங்களூரு:

கடும் அதிருப்தி

கர்நாடகத்தில் கொப்பல் உள்பட 10 மாவட்டங்களில் பா.ஜனதா அலுவலக திறப்பு விழா நேற்று கொப்பலில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கலந்து கொண்டார். இந்த விழாவில் பங்கேற்க நேற்று முன்தினம் மாலை வரை மூத்த தலைவர் எடியூரப்பாவுக்கு அழைப்பு விடுக்கவில்லை. இதனால் அவர் கடும் அதிருப்தியில் இருந்தார். நேற்று மாலையில் அவரை பா.ஜனதா தலைவர்கள் நேரில் சென்று விழாவுக்கு வருமாறு கூறி அழைப்பிதழ் வழங்கினர்.

தன்னால் இந்த விழாவில் கலந்து கொள்ள முடியாது என்று அவர் கூறிவிட்டதாக தெரிகிறது. தன்னை கட்சியில் ஓரங்கட்டுவது குறித்து அவர் தனது கடும் அதிருப்தியை தெரிவித்தார் என்றும் கூறப்படுகிறது. இதையடுத்து பா.ஜனதா மேலிட பொறுப்பாளர் அருண்சிங் எடியூரப்பாவை தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசி, விழாவுக்கு வரும்படி கேட்டு கொண்டார்.

உண்மை இல்லை

அவர் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியபோது எடியூரப்பாவை அருண்சிங் சமாதானப்படுத்தினார். இதையடுத்து எடியூரப்பா நேற்று காலை பெங்களூருவில் இருந்து தனி விமானம் மூலம் கொப்பலுக்கு புறப்பட்டு சென்றார். அங்கு கட்சி அலுவலக திறப்பு விழாவில் அவர் கலந்து கொண்டார். எடியூரப்பாவின் அதிருப்தி பா.ஜனதாவில் பெரும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது. அவர் கொப்பலுக்கு புறப்படும் முன்பு பெங்களூருவிலும், அதன் பிறகு கொப்பலிலும் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

பா.ஜனதாவில் நான் புறக்கணிக்கப்படுகிறேன் என்று சொல்வதில் உண்மை இல்லை. கட்சியின் அனைத்து கூட்டங்களிலும் நான் கலந்து கொள்கிறேன். கொப்பல் நிகழ்ச்சியில் நான் கலந்து கொள்வது இல்லை என்று முடிவு எடுத்ததாக சொல்வதில் உண்மை இல்லை. அந்த கூட்டத்தில் நான் பங்கேற்பது இல்லை என்று முடிவு செய்திருந்தேன். சில கட்டாயம் எழுந்ததால் நான் அந்த விழாவில் பங்கேற்க முடிவு செய்தேன்.

யாரும் ஒழிக்க முடியாது

கர்நாடகத்தில் அரசியல் ரீதியாக என்னை யாரும் ஒழிக்க முடியாது. அரசியலில் யாரும் யாரையும் அழிக்க முடியாது. எனக்கு என்று தனி பலம் உள்ளது. கர்நாடகத்தில் பா.ஜனதாவை நான் பலப்படுத்தினேன். கட்சியை ஆட்சியில் அமர வைத்தேன். அதற்காக நான் பாடுபட்டேன். இது ஒட்டுமொத்த கர்நாடகத்திற்கும் தெரியும். அதனால் கட்சியில் நான் ஓரங்கட்டப்படுவதாக கூறுவதில் அர்த்தம் இல்லை.

பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரது தலைமையில் தேர்தல் பணிகளை மேற்கொண்டு கர்நாடக சட்டசபை தேர்தலில் பா.ஜனதா 140 தொகுதிகளில் வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை பிடிக்கும். பா.ஜனதா ஒற்றுமையாக உள்ளது. அதனால் எங்கள் கட்சி மீண்டும் வெற்றி பெறும் வாய்ப்பு உள்ளது. மீண்டும் ஆட்சி அதிகாரத்தில் அமர வேண்டும் என்ற ஆசை எனக்கு இல்லை.

நிறுத்த முடிவு

பா.ஜனதாவை ஆட்சி கட்டிலில் அமர்த்த வேண்டும் என்பதே எனது நோக்கம். அதற்காக நாங்கள் அனைவரும் ஒற்றுமையாக பாடுபட்டு வருகிறோம். எனது மகன் விஜயேந்திராவை சிகாரிபுரா தொகுதியில் போட்டியிடுமாறு கூறியுள்ளேன். கட்சியும் அவரை அந்த தொகுதியில் நிறுத்த முடிவு செய்துள்ளது. இந்த விஷயத்தில் கட்சியின் முடிவே இறுதியானது.

இவ்வாறு எடியூரப்பா கூறினார்.


Next Story