ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்றும் திட்டம் இல்லை - மத்திய அரசு


ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்றும் திட்டம் இல்லை - மத்திய அரசு
x

ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்றும் திட்டம் எதுவும் இல்லை என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

பெயர் மாற்ற கோரிக்கை

நாட்டின் பல நகரங்களின் பெயர்கள் அவ்வப்போது மாற்றப்பட்டு உள்ளன. எனவே அந்த பகுதிகளில் இயங்கி வரும் ஐகோர்ட்டுகளின் பெயரையும் புதிய பெயரில் மாற்ற வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அந்தவகையில் பம்பாய் (பாம்பே), கல்கத்தா, மெட்ராஸ் என்ற பெயர்களில் இயங்கி வரும் ஐகோர்ட்டுகளை அந்தந்த நகரங்களின் தற்போதைய பெயரான மும்பை, கொல்கத்தா, சென்னை ஐகோர்ட்டுகள் என பெயர் மாற்றம் செய்ய வேண்டும் என மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

எனவே இதற்காக கடந்த 2016-ம் ஆண்டு 'ஐகோர்ட்டுகள் (பெயர் மாற்றம்) மசோதா-2016' என்ற பெயரில் மசோதா கொண்டு வரப்பட்டது. இதில் வேறு சில ஐகோர்ட்டுகளின் பெயரும் மாற்றும் வகையில் விதிகள் கொண்டு வரப்பட்டன. குறிப்பாக ஒரிசா என்பது ஒடிசாவாகவும், கவுகாத்தி என்பது குவகாத்தியாகவும் திருத்துவதற்கு வழிமுறைகள் சேர்க்கப்பட்டன.

மாறுபட்ட கருத்துகள்

ஆனால் இந்த பெயர் மாற்ற நடவடிக்கைகளுக்கு பல்வேறு தரப்பில் இருந்தும் மாறுபட்ட கருத்துகள் வெளியாகின. குறிப்பாக பெயரை மாற்றுவதற்கு சில ஐகோர்ட்டுகள் விரும்பவில்லை. குறிப்பாக தமிழ்நாடு ஐகோர்ட்டு என பெயர் மாற்றுமாறு தமிழக அரசு விடுத்த கோரிக்கைக்கு சென்னையில் உள்ள மெட்ராஸ் ஐகோர்ட்டு அதிருப்தி தெரிவித்தது. இதைப்போல கல்கத்தா ஐகோர்ட்டை கொல்கத்தா ஐகோர்ட்டு என மாற்றுவதற்கு அந்த மாநில அரசும், ஐகோர்ட்டும் எதிர்ப்பு தெரிவித்தன. இதனால் இந்த பெயர் மாற்ற நடைமுறையை அரசு முன்னெடுத்து செல்லவில்லை. அந்த மசோதா நாடாளுமன்றத்திலேயே முடங்கியது.

மத்திய சட்ட மந்திரி

இந்த நிலையில் மேற்படி ஐகோர்ட்டுகளின் பெயரை மாற்றும் திட்டம் எதுவும் மீண்டும் அரசிடம் உள்ளதா? என நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.

இதற்கு சட்ட மந்திரி அர்ஜூன் ராம் மெக்வால் நேற்று எழுத்து மூலம் பதிலளித்து இருந்தார். அதில் அவர் கூறியதாவது:-

பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸ் ஐகோர்ட்டுகளின் பெயர்களை முறையே மும்பை, கொல்கத்தா மற்றும் சென்னை ஐகோர்ட்டுகளாக மாற்றுவது தொடர்பாக, 'ஐகோர்ட்டுகள் (பெயர் மாற்றம்) மசோதா, 2016' என்ற பெயரில் 2016-ம் ஆண்டு ஜூலை 19-ந்தேதி மக்களவையில் ஒரு மசோதாவை அரசு கொண்டு வந்தது.

ஆனால் இந்த நடவடிக்கை தொடர்பாக எழுந்த மாறுபட்ட கருத்துகளுக்கு மத்தியில், 16-வது மக்களவை கலைக்கப்பட்டதால், மசோதாவை மேலும் எடுத்துச் செல்ல முடியவில்லை.

தற்போதைய நிலையில் இந்த விவகாரத்தில் மசோதா கொண்டு வரும் திட்டம் எதுவும் அரசிடம் இல்லை.

இவ்வாறு அர்ஜூன் ராம் மெக்வால் தெரிவித்தார்.


Next Story