சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் இல்லை; மக்களவையில் மத்திய அரசு விளக்கம்


சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் இல்லை; மக்களவையில் மத்திய அரசு விளக்கம்
x

சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் இல்லை என்று மக்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.

அலுவல் மொழி, இந்தி

நாடாளுமன்ற மக்களவையில் கேள்வி நேரத்தின்போது, பா.ஜனதா உறுப்பினர் சுப்ரத் பதக், ''சமஸ்கிருதத்தை மத்திய அரசின் தகவல் தொடர்பு மற்றும் அலுவல் மொழி ஆக்கும் திட்டம் உள்ளதா?'' என்று கேட்டார்.

அதற்கு மத்திய உள்துறை இணை மந்திரி அஜய்குமார் மிஸ்ரா கூறியதாவது:-

இல்லை. சமஸ்கிருதத்தை அலுவல் மொழி ஆக்கும் திட்டம் எதுவும் பரிசீலனையில் இல்லை. இந்திய அரசியல் சட்டத்தின் 343(1)-வது பிரிவுப்படி, மத்திய அரசின் அலுவல் ெமாழியாக இந்தி (தேவநகரி எழுத்துகள்) உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

பாகிஸ்தானில் இருந்து டிரோனில் கடத்தல்

மக்களவை கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நிசித் பிரமாணிக் கூறியதாவது:-

தேசவிரோத சக்திகளும், கடத்தல்காரர்களும் பாகிஸ்தானில் இருந்து ஆயுதங்களையும், போதைப்பொருட்களையும் பஞ்சாப்புக்கு கடத்த டிரோன்களை பயன்படுத்தி வருகிறார்கள். கடந்த 3 ஆண்டுகளில், இதுபோல் ஆயுதம், போதைப்பொருட்கள் கடத்தி வர பயன்படுத்தப்பட்ட டிரோன்கள் பிடிபட்ட சம்பவங்கள் 28 தடவை நடந்துள்ளன. டிரோன்களிடம் இருந்து 125 கிலோ ஹெராயின், 100 கிராம் அபின், ஒரு 9 எம்.எம். ரக கைத்துப்பாக்கி, 7 கைத்துப்பாக்கிகள் மற்றும் ஆயுதங்கள், வெடிபொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இவ்வாறு அவர் கூறினார்.

பருவநிலை மாற்றம்

மக்களவையில் ஒரு கேள்விக்கு மத்திய சுற்றுச்சூழல் துைற இணை மந்திரி அஸ்வினிகுமார் சவுபே அளித்த பதில் வருமாறு:-

பருவநிலை தொடர்பான இந்தியாவின் நடவடிக்கைகளுக்கு இதுவரை உள்நாட்டு நிதி ஆதாரங்களில் இருந்துதான் நிதி பெறப்பட்டது. நிதி தேவையை பூர்த்தி செய்வது சவாலாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தமிழ்நாட்டில் போலீஸ்

கேள்வி நேரத்தில் மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

தேசிய அளவில், ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீசார் எண்ணிக்கை 196 ஆக உள்ளது. ஆனால், உண்மையில் 152 போலீசார்தான் உள்ளனர்.

இந்த விகிதாச்சாரம், பீகார் (75 போலீசார்), மேற்கு வங்காளம் (97 போலீசார்) ஆகிய மாநிலங்களில் மிகவும் குறைவாக உள்ளது. தமிழ்நாட்டில், ஒரு லட்சம் மக்கள்தொகைக்கு ஒப்புதல் அளிக்கப்பட்ட போலீசார் எண்ணிக்கை 171.95. ஆனால், உண்மையில் 154.25 போலீசார்தான் உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

பெயர் மாற்றம்

மற்றொரு கேள்விக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் கூறியதாவது:-

மும்பை சென்டிரல் ரெயில் முனையத்தின் பெயரை 'நானா சங்கர்ஷேத் மும்பை சென்டிரல் ரெயில் முனையம்' என்று மாற்றுமாறு மராட்டிய மாநில அரசு சிபாரிசு செய்துள்ளது. அதுபற்றி பல்வேறு அரசு அமைப்புகளுடன் ஆலோசனை நடத்த வேண்டி உள்ளது.

எனவே, இந்த விவகாரத்தில் மத்திய அரசால் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை.

இவ்வாறு அவர் கூறினார்.

இன்புளுயன்சா

மாநிலங்களவை கேள்வி நேரத்தில், மத்திய சுகாதாரத்துறை இணை மந்திரி பாரதி பிரவீண் பவார் கூறியதாவது:-

கடந்த ஜனவரி 1-ந் தேதியில் இருந்து மார்ச் 21-ந் தேதிவரை நாடு முழுவதும் எச்3என்2 இன்புளுயன்சா பாதிப்பு, 1,317 பேருக்கு உறுதி செய்யப்பட்டுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம் நிலைமையை கண்காணித்து வருகிறது. எச்3என்2 உள்ளிட்ட சுவாச தொற்றுகளை கட்டுப்படுத்த மாநில அரசுகளுக்கு உதவி வருகிறது. மாநிலங்களுக்கு பல்வேறு வழிகாட்டுதல்களை வழங்கி வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story