அமலாக்கத்துறை காவலுக்கு எதிராக கெஜ்ரிவால் மனு: அவசரமாக விசாரிக்க டெல்லி ஐகோர்ட்டு மறுப்பு
அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார்.
டெல்லி,
டெல்லி அரசின் மதுபான கொள்கையில் முறைகேடு நடைபெற்றதாக அம்மாநில முதல்-மந்திரி அரவிந்த் கெஜ்ரிவால் மீது அமலாக்கத்துறை பணமோசடி உள்பட பல்வேறு பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளது. இந்த வழக்கில் விசாரணைக்கு ஆஜராகும்படி 8 முறை சம்மன் அனுப்பியும் கெஜ்ரிவால் ஆஜராகவில்லை.
அதேவேளை இந்த சம்மனை எதிர்த்து டெல்லி ஐகோர்ட்டில் கெஜ்ரிவால் வழக்கு தொடர்ந்தார். இந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தபோது கெஜ்ரிவால் மீதான சட்ட நடவடிக்கைக்கு எந்த தடையும் விதிக்க கோர்ட்டு மறுத்துவிட்டது.
இதனிடையே, மதுபான கொள்கை முறைகேடு வழக்கில் கெஜ்ரிவாலை அமலாக்கத்துறை நேற்று முன் தினம் இரவு கைது செய்தது. கைது செய்யப்பட்ட கெஜ்ரிவால் டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நேற்று ஆஜர்படுத்தப்பட்டார். அப்போது, கெஜ்ரிவாலை 6 நாட்கள் (28ம் தேதி வரை) அமலாக்கத்துறை காவலில் எடுத்து விசாரிக்க கோர்ட்டு அனுமதி வழங்கியது. இதையடுத்து, கெஜ்ரிவால் அமலாக்கத்துறை காவலில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில், அமலாக்கத்துறை தன்னை கைது செய்தது சட்ட விரோதம் எனக் கூறி டெல்லி ஐகோர்ட்டில் அரவிந்த் கெஜ்ரிவால் மனு தாக்கல் செய்துள்ளார். மேலும் இந்த மனுவை அவசரமாக விசாரிக்க கோரி முறையிட்டார்.
ஆனால், மனுவை அவசரமாக விசாரிக்க வேண்டும் என்ற கெஜ்ரிவாலின் கோரிக்கையை டெல்லி ஐகோர்ட்டு நிராகரித்துள்ளது. வரும் புதன்கிழமை தான் இந்த மனுவை விசாரிக்க முடியும் என்று ஐகோர்ட்டு கூறியுள்ளது. இதனை ஐகோர்ட்டு பதிவுத்துறையும் உறுதி செய்துள்ளது.