மாணவரை, பேராசிரியர் பயங்கரவாதியுடன் ஒப்பிட்ட விவகாரம்: இது ஒன்றும் தீவிரமான விஷயம் இல்லை - கர்நாடக மந்திரி
இது ஒன்றும் தீவிரமான விஷயம் இல்லையென்று மாணவரை, பேராசிரியர் பயங்கரவாதியுடன் ஒப்பிட்ட விவகாரம் குறித்து கர்நாட மந்திரி கருத்து தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் உடுப்பியில் உள்ள மணிபால் தனியார் கல்லூரியில் மாணவர் ஒருவரை பயங்கரவாதி என்று குறிப்பிட்ட பேராசிரியர் கல்லூரி நிறுவனத்தால் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். பேராசிரியர்-மாணவர் இருவரும் பேசும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதையடுத்து பேராசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த நிலையில் இந்த சம்பவம் குறித்து கர்நாடக கல்வி மந்திரி பி.சி. நாகேஷ் கூறியதாவது:-
இந்த சம்பவம் துரதிர்ஷ்டவசமானது. ஆசிரியர் அந்தப் பெயரைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. இருந்தாலும் இது ஒன்றும் தீவிரமான விஷயம் இல்லையென்று நான் உணர்கிறேன். ஏனென்றால், நாம் பலமுறை மாணவர்களை 'ராவணன்' என்றும் சகுனி என்றும் அழைக்கிறோம். ஆனால் அது ஒருபோதும் பிரச்சனையாக மாறுவதில்லை. ஒரு குறிப்பிட்ட சமூகத்தைச் சேர்ந்த 'கசாப்' என்ற பெயர் மட்டும் ஏன் பிரச்சனையாக மாறியது என்று எனக்குத் தெரியவில்லை.
அரசு அதை தீவிரமாக எடுத்து நடவடிக்கை எடுத்தாலும், சில பெயர்கள் ஏன் தேசிய பிரச்சனையாக மாறுகிறது என்பதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. இந்த சம்பவம் நடந்திருக்கக் கூடாது. ஆனாலும் அதற்கான நடவடிக்கையை அரசு எடுத்துள்ளது. அந்த பேராசிரியர் பணியிடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார். இந்த விவகாரத்தை இத்துடன் முடித்து விட வேண்டும்.
அமைச்சர்களை பொதுவாக ராவணன், சகுனி போன்ற பெயர்களால் குறிப்பிடுகிறோம். அது ஏன் செய்தியாக மாறுவதில்லை? ராவணன் என்ற பெயருக்கு நேர்மறை அர்த்தம் உள்ளதா? இல்லை. நான் எதையும் ஒப்பிடவில்லை. இதை சில அரசியல் கட்சிகள் குறிப்பிட்ட சமூகத்தினருக்காக பயன்படுத்தி வருகின்றன. இருந்தாலும் ஆசிரியர் அந்த வார்த்தையைப் பயன்படுத்தியிருக்கக் கூடாது. இளம் மனங்கள் புண்படக்கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.