பாஜகவின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அஞ்சப்போவது இல்லை : காங்கிரஸ்
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.
புதுடெல்லி,
நேஷனல் ஹெரால்டு வழக்கில் காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது. இவ்விவகாரம் குறித்து கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ், " அமலாகக்த்துறை சம்மனுக்கு அஞ்சப்போவது இல்லை. பாஜகவின் இது போன்ற அரசியல் பழிவாங்கும் நடவடிக்கைக்கு அடி பணிய மாட்டோம்" என்று தெரிவித்துள்ளது.
செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான அபிஷேக் மனு சங்வி கூறுகையில்' போலியான புனையப்பட்ட வழக்குகள் மூலம் கோழைத்தனமான சதிச்செயலில் வென்று விட முடியாது என்பதை மோடி அரசு உணர வேண்டும். இத்தகைய வழக்குகள் மூலம் சோனியா காந்தி, ராகுலை பயமுறுத்த முடியாது" என்றார்.
சம்மன் விடுத்த அமலாக்கத்துறை
நேஷனல் ஹெரால்டு நிறுவனத்தை யங் இந்தியா அசோசியேட் நிறுவனத்திற்கு மாற்றியதில் முறைகேடு என சுப்பிரமணிய சாமி வழக்கு தொடர்ந்துள்ளார். இதனையடுத்து நேஷனல் ஹெரால்டு விவகாரம் தொடர்பாக அமலாக்கத்துறை சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின்கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளது.
இந்தநிலையில் நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாக காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்திக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது. ஏற்கனவே காங்கிரஸ் தலைவர்கள் பவன்குமார் பன்சால் உள்ளிட்டோரை விசாரித்த நிலையில், அமலாக்கத்துறை சம்மன் அனுப்பி உள்ளது குறிப்பிடத்தக்கது.