ஒப்பந்த தொகையை விடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம்: மாநகராட்சி காண்டிராக்டர்கள் 57 பேருக்கு நோட்டீஸ்


ஒப்பந்த தொகையை விடுக்க அதிகாரிகளுக்கு அழுத்தம்: மாநகராட்சி காண்டிராக்டர்கள் 57 பேருக்கு நோட்டீஸ்
x
தினத்தந்தி 17 Aug 2023 6:45 PM GMT (Updated: 17 Aug 2023 6:46 PM GMT)

ஒப்பந்த தொகையை விடுவிக்க அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பதாக கூறி அளித்த புகாரின் பேரில் மாநகராட்சி காண்டிராக்டர்கள் 57 பேருக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 10 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி உள்ளனர்.

பெங்களூரு:

பெங்களூரு மாநகராட்சியில் கடந்த 3 ஆண்டுகளாக நடைபெற்ற ஒப்பந்த பணிகளுக்காக காண்டிராக்டர்

களுக்கு ஒப்பந்த தொகை விடுவிக்கப்படாமல் உள்ளது. மாநகராட்சியில் நடைபெற்ற பல்வேறு ஒப்பந்த பணிகளில் முறைகேடு நடந்திருப்பதால், அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அந்த விசாரணை முடிந்த பின்பும், ஒப்பந்த பணிகளை ஆய்வு செய்த பின்பே பணம் விடுவிக்கப்படும் என்று துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் திட்டவட்டமாக கூறிவிட்டார்.

இதனால் துணை முதல்-மந்திரி மீதும், ஒப்பந்த தொகையை விடுவிக்க கோரியும், மாநகராட்சி காண்டிராக்டர்கள் கவர்னிடம் புகார் அளித்திருந்தனர். இதையடுத்து, ஒப்பந்த தொகையை விடுவிக்கும் விவகாரம் தொடர்பாக கவர்னரிடம், மாநகராட்சி தலைமை கமிஷனர் துஷார் கிரிநாத் விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில், ஒப்பந்த தொகையை விடுவிக்கும்படியும் அதிகாரிகளுக்கு அழுத்தம், நெருக்கடி மற்றும் தொல்லை கொடுப்பதாக கூறி 57 காண்டிராக்டர்கள் மீது மாநகராட்சியின் உதவி கமிஷனர் மகாதேவ் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அத்துடன் கவர்னரிடம் காண்டிராக்டர்கள் அளித்துள்ள புகார் குறித்தும் பரிசீலனை நடத்தும்படியும் மகாதேவ் தனது புகாரில் தெரிவித்து இருந்தார்.

அந்த புகாரை பெற்றுக் கொண்ட போலீசார், காண்டிராக்டர்களிடம் விசாரித்து விட்டு சட்டப்படி நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், மாநகராட்சியின் 57 காண்டிராக்டர்கள் விசாரணைக்கு ஆஜராக கோரி ஐகிரவுண்டு போலீசார் நோட்டீஸ் அனுப்பி வைத்திருந்தனர்.

இதையடுத்து, 57 பேரில் நேற்று முதற்கட்டமாக 10 காண்டிராக்டர்கள் ஐகிரவுண்டு போலீஸ் நிலையத்தில் ஆஜராகினர். அவர்களிடம், அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுப்பது ஏன்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தினார்கள். பின்னர் தாங்கள் அழைக்கும் போது மீண்டும் ஆஜராக வேண்டும் என்றும் காண்டிராக்டர்களுக்கு போலீஸ் அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளார்.

விசாரணைக்கு ஆஜராக போலீசார் உத்தரவிட்டுள்ளதால், பீதி அடைந்துள்ள காண்டிராக்டர்கள் போலீஸ் நிலையத்திற்கு தொடர்ந்து படையெடுத்து விளக்கம் அளித்த வண்ணம் உள்ளனர். ஒப்பந்த தொகையை விடுவிக்க கோரிய காண்டிராக்டர்களுக்கு தற்போது போலீசார் விசாரணைக்கு ஆஜராக நோட்டீஸ் அனுப்பி வைத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதற்கு காண்டிராக்டர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.


Next Story