இப்போது இலவச நாப்கின்... அடுத்து காண்டம் கேட்பீர்களா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சர்ச்சை பேச்சு


இப்போது இலவச நாப்கின்... அடுத்து காண்டம் கேட்பீர்களா? பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி சர்ச்சை பேச்சு
x
தினத்தந்தி 29 Sep 2022 5:43 AM GMT (Updated: 29 Sep 2022 6:02 AM GMT)

பீகாரில் இலவச நாப்கின் கேட்ட மாணவிகளிடம் அடுத்து காண்டம் கேட்பீர்களா? என மகளிர் வளர்ச்சி கழக எம்.டி. கேட்டது சர்ச்சை ஏற்படுத்தி உள்ளது.

பாட்னா,

பீகாரில் மகளிர் வளர்ச்சி கழக மேலாண் இயக்குனரான ஐ.ஏ.எஸ். அதிகாரி ஹர்ஜோத் கவுர் என்பவரிடம் மாணவிகள் பேசிய உரையாடல் அடங்கிய வீடியோ வைரலாக பரவி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

அந்த வீடியோவில், அதிகாரி கவுரை நோக்கி மாணவிகள் சிலர், எங்களுக்கு இலவச நாப்கின்களை அரசு வழங்க வேண்டும். இதனால், நாங்கள் பிறரை சார்ந்திருக்க வேண்டிய அவசியம் இராது என கூறியுள்ளனர். அரசு நிறைய இலவசங்களை அளித்து வருகிறது.

அதனால், ரூ.20 முதல் ரூ.30 விலையுள்ள நாப்கின்களை எங்களுக்கு அவர்கள் வழங்க முடியாதா? என்றும் கேட்டுள்ளனர். இதற்கு அதிகாரி ஹர்ஜோத் கவுர், இந்த கோரிக்கைகளுக்கு ஏதேனும் முடிவு உண்டா? நாளைக்கு நீங்கள், அரசு ஜீன்ஸ் துணிகளை வழங்கலாம். அழகிய காலணிகளை வழங்கலாம் என கூறுவீர்கள்.

முடிவில், குடும்ப கட்டுப்பாடு என்று வரும்போது, உங்களுக்கு இலவச காண்டம்கள் கூட வேண்டும் என கூறுவீர்கள் என பேசிய காட்சிகள் வெளிவந்துள்ளன.

ஏன் அரசிடம் இருந்து பொருட்களை எடுத்து கொள்ள வேண்டிய அவசியம் உங்களுக்கு உள்ளது? என கேட்டுள்ள கவுர், இந்த எண்ணம் தவறானது என்றும் பேசியுள்ளார்.

இதற்கு மாணவிகள், தேர்தலின்போது வாக்குகளை பெற அரசு எண்ணற்ற வாக்குறுதிகளை அளித்து வருகின்றன என பதிலடியாக கூறியுள்ளனர்.

அதற்கு கவுர், நீங்கள் வாக்களிக்காதீர்கள். (பாகிஸ்தானை போல) என குறிப்பிட்டு உள்ளார். இதன்பின்பு கவுர் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், பெண்களின் உரிமை மற்றும் அதிகாரத்திற்காக கடுமையாக போராடிய நபர்களில் ஒருவர் என அறியப்படும் பெண் நான்.

சில தவறான நபர்கள், அவர்களது தவறான செயல்களுக்காக அவர்களுக்கு எதிராக எங்களது அமைப்பு எடுத்த கடுமையான நடவடிக்கைகளால் ஒவ்வொரு விசயத்திலும் தோற்று, துவண்டு போயுள்ளனர். அந்த நபர்கள், என்னுடைய நன்மதிப்புகளை சீர்குலைக்கும் கீழ்த்தர முயற்சிகளில் இதுபோன்று ஈடுபட்டு வருகின்றனர் என தெரிவித்து உள்ளார்.


Next Story